திருவாரூரில் முன் விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளிக்கு கத்திகுத்து
’’புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரிந்த ஆறு நபர்கள் மீது 147, 148, 341, 294/b, 307 கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு’’
திருவாரூர் அருகே கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கட்டுமான தொழிலாளி ஆவார். தனது இருசக்கர வாகனத்தில் கொத்தங்குடியில் உள்ள வீட்டிற்கு சுரேஷ் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது. சுரேஷுக்கு மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில் அவரை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் சுரேஷ் மற்றும் அவருடைய நண்பர் காளிதாஸ் ஆகியோர் கடந்த ஆண்டு பண்டிதகுடி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் ரமேஷை அரிவாளால் வெட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுரேஷ் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரையும் சிறையில் அடைத்த நிலையில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஒரு மணி நேரத்தில் ரமேஷ் தரப்பினர் காளிதாஸை கொலை செய்தனர். இதன் காரணமாக காளிதாஸ் தரப்பினர் ரமேஷின் தந்தை வேலாயுதம் வீட்டை அடித்து நொறுக்கினர். அதன் பின்னர் வேலாயுதம் மற்றும் அவரது மகன் பண்டிதகுடி கிராமத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு அம்மையப்பன் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். அதனை அடுத்து சுரேஷ் பண்டிதகுடி கிராமத்தில் இருந்து வெளியேறி கொத்தங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த நிலையில் இன்று சுரேஷ் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரிந்த ஆறு நபர்கள் மீது 147, 148, 341, 294/b, 307 கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுரேஷ் கண் விழித்தால் மட்டுமே சுரேஷை யார் யார் கத்தியால் குத்தினார்கள் என்பது குறித்த தகவல் தெரியும் எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூரில் முதல்வரால் திறக்கப்பட்ட 138 ஆண்டுகள் பழமையான ராஜப்பா பூங்கா மின்னொளியில் ஜொலிக்கிறது