Crime : பிளஸ் -1 மாணவியை பெண் கேட்டு ரகளை.. தட்டிக்கேட்ட தாய்.. வெட்டி வீசிய ரவுடி.. ஆதம்பாக்கத்தில் பயங்கரம்..!
திருமணத்துக்கு மைனர் பெண்ணை கேட்டு, தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கேட்டு தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (28). ரவுடியாக வலம் வரும் இவரின் மீது 12 திருட்டு வழக்குகள் உட்பட 15 வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் -1 மாணவி மீது விக்னேஷூக்கு காதல் ஏற்பட்டதாக சொல்லி வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று போதையில் இருந்து விக்னேஷ் அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு சென்று மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அருகில் வசித்து வந்த ஹேமாவதி என்பவரது வீட்டின் மீதும் கற்களை வீசியுள்ளார். இதனைக்கண்டித்த ஹேமாவதியை விக்னேஷ் கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்த போது, உடனே அங்கு வந்த விக்னேஷின் தாயார் வெள்ளத்தாய் அதை தட்டிக்கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த விக்னேஷ் இதைக்கேட்டு கோபமடைந்து கையில் இருந்த பட்டாக்கத்தியை கொண்டு அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த வெள்ளத்தாய் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப்பலன்றி உயிரிழந்தார். இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் வேளச்சேரியில் பதுங்கி இருந்த விக்னேஷை கைது செய்தனர்.