Raj Kundra Arrested: ஆபாச படம் தயாரிப்பு - இரவில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர்!
ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர்.
ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் கணவர் ராஜ்குந்த்ராவுடன் மும்பையில் வசித்து வருகிறார். லண்டனைச் சேர்ந்தவர் ஷில்பாவின் கணவர் ராஜ்குந்த்ரா தொழிலதிபர் ஆவார்.
இந்த நிலையில் ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதி செய்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், பிப்ரவரி 2021ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு பதியப்பட்டது. அதாவது ஆபாசப் படங்களை தயாரித்து அதனை சில ஆப்களுக்கு விற்பனை செய்வதாக புகார். அதன் விசாரணையில் சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலும் விசாரணை தொடர்கிறது என்றார்.
கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா மீது, மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது மற்றும் ஆபாச புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்குந்த்ரா மும்பை குற்றப்பிரிவுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். வெளியான தகவலின்படி, திரைப்பட நடிகைகளை நிர்வாணமாக நடித்தவைத்து அதனை செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகாரில் ஏற்கெனவே 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த படங்கள் பணம் செலுத்தப்பட்டு பார்க்கப்பட்டும் செல்போன் ஆப்களில் வெளியாகின்றன.
இது தொடர்பான புகார் ஒன்றை ராஜ்குந்தராவுக்கு எதிராக ஏற்கெனவே நடிகை பூனம் பாண்டேவும் கொடுத்துள்ளார். மும்பை உயர் நீதிமன்றத்தில் ராஜ்குந்த்ரா மீதும் அவரது உதவியாளர் மீதும் வழக்கு தொடர்ந்த பூனம் பாண்டே, குந்த்ராவும், அவரது உதவியாளரும் தன்னுடைய படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாகவும், அதற்கான ஒப்பந்தம் முடிந்தும் அது தொடர்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதனை மறுத்திருந்த குந்த்ராவின் உதவியாளர், அந்த புகார் தொடர்பான எந்த நோட்டீசும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
Businessman Raj Kundra has been arrested by the Crime Branch in a case relating to creation of pornographic films & publishing them through some apps. He appears to be the key conspirator. We have sufficient evidence regarding this: Mumbai Police Commissioner pic.twitter.com/LbtBfG4jJc
— ANI (@ANI) July 19, 2021