Crime : ஆன்லைன் ரம்மியில் தோற்று அவஸ்தை.. ஒன்றுகூடிய மக்கள்.. திருடனாக மாறிய கான்ஸ்டபிள்.. என்ன நடந்தது?
புதுச்சேரி: ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிய ஐ.ஆர்.பி.என். காவலர் கைது
புதுச்சேரி ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக ஸ்கூட்டரில் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிய ஐ.ஆர்.பி.என். காவலர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி சோலைநகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 41). காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 26ந் தேதி காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள சுசேன் வீதியில் தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வீட்டு வேலை செய்வதற்காக சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் பெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் படிக்க: Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!
இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகார் செய்தார். காவல் ஆய்வாளர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து பணத்தை திருடுவதுபோல் காட்சி பதிவாகி இருந்தது. இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஐ.ஆா்.பி.என். காவலரான காளிதாஸ் (27) என்பவர்தான் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடி வந்த நிலையில் புதுவை பூங்கா அருகே சுற்றித்திரிந்த காளிதாசை கைது செய்தனர்.
பின்னர் அவரை பெரியகடை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், அவரிடம் 8 மோட்டார் சைக்கிள்களுக்கான சாவிகள் இருந்தன. மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்காக சாவிகளுடன் சுற்றித்திரிந்தது அம்பலமானது. அத்துடன் மகேஸ்வரியின் ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்பான பணியில் இருந்த ஐ.ஆர்.பி.என். காவலரே திருடி கைதாகி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்