Dowry Suicide: மீண்டுமா.. கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமை, கணவன் குடும்பத்தினர் அட்டூழியம்
Bengaluru Dowry Suicide: கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளான, கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Dowry Suicide: கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட பெண் முன்னாள் ஐடி ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது.
கர்ப்பிணி பெண் தற்கொலை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள, BTM லே-அவுட்டில் வசித்து வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஏற்கனவே சுமார் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பான ஷில்பா எழுதிய கடிதம் ஏதும் தற்போது வரை கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் உயிரிழந்த ஷில்பா என்ற அந்த பெண்ணின் தாயார் சாரதா, தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக புகாரளித்துள்ளார். கணவன் பிரவீன், அவரது தாயார் சாந்தவ்வா ஆகியோரின் கொடுமை தாங்காமலேயே ஷில்பா உயிரை மாய்த்துக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஐடி ஊழியர் டூ பானி பூரி விற்பனையாளர்:
புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பிரவீன் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பிரபலமான ஐடி அலுவலகத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்த பிரவீன் கடந்த ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, BTM லே-அவுட்டில் பானி பூரி விற்று வந்துள்ளார். சாராதா அளித்த புகாரின்படி, தனது மகள் ஷில்பாவின் திருமணத்திற்கு 30 லட்ச ரூபாய் வரை செய்துள்ளார். 150 கிராம் தங்கத்தை வரதட்சணையாகவும் கொடுத்துள்ளார். ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், ஷில்பா தனது அம்மா வீட்டிற்கே சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்தி பிரவீன் மீண்டும் அழைத்து வந்தாலும், அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைமாத கர்ப்பிணிக்கு வரதட்சணை கொடுமை:
மகள் குறித்து பேசுகையில், “ஷில்பாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரவீனும் அவரது தாயாரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். இக்கட்டான சூழலிலும் 5 லட்ச ரூபாயை ரொக்கமாக ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆனால், பிரவீன் மீண்டும் பணம் கேட்டு தொல்லை செய்ய தொடங்கினார். எனது மகனை விவாகரத்து செய்து விடு, அப்போது தான் அதிக வரதட்சணை கொடுக்கும் வேறொரு பெண்ணை அவனால் திருமணம் செய்து கொள்ள முடியும் என மாமியார் மனரீதியாக துன்புறுத்தியுள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் ஷில்பா தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க இருந்தார். ஆனால் பிரவீன் மற்றும் அவனது தாயாரின் கொடுமையை தாங்க முடியாமல் எனது மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள்” என சாரதா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.





















