சாமி விக்ரம்னு நினைப்பு.... - பீர் பாட்டிலுடன் ரகளை செய்த போலீஸ் ஏட்டு கைது!
தென்காசியில் பீர் பாட்டிலுடன் பாரில் ரகளை செய்ததாக போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசியில் பீர் பாட்டிலுடன் பாரில் ரகளை செய்ததாக போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானப் படம் சாமி. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்தில் விக்ரமின் ஆரம்ப காட்சிகள் கெத்தாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் முதல் பாடலான ‘திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலைக்கோட்டைடா திருப்பதிக்கே லட்டு தந்தான் சாமிடா’ என்ற பாடல் அனைத்து தரப்பு போலீஸ்காரர்களுக்கும் அப்போது உற்சாகத்தை ஏற்படுத்தாமல் இல்லை. இதில் நடிகர் விக்ரம் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்டு ஜெயிலுக்கு செல்வார்.
பின்னர் அடுத்த நாளே சிறையில் இருந்து வெளியே வருவார். தொடர்ந்து தான் ஆறுசாமி டெப்பிட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ் என்று கூறி போலி போலீஸை மிரள வைப்பார். இந்த காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அதுபோல தற்போது தென்காசியில் ஒரு ஆறுசாமி தோன்றியிருக்கிறார். ஆனால் இவர் பெயர் ஆறுசாமியோ அல்லது விக்ரமோ இல்லை. அவர் பெயர் ராஜகுரு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருபவர் ராஜகுரு. இவர் நேற்று முன்தினம் மாலையில் சேர்ந்தமரம் வடக்கு புறத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பாக்கிய சாமி மகன் ராஜ் என்பவரை, பார் விற்பனையாளரிடம் ஆம்லெட் வாங்கி வரக் கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுக்கவே ராஜகுரு ஆத்திரம் அடைந்து கையில் பீர் பாட்டிலுடன் அவரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பாரில் மது கேட்டும் தகராறு செய்துள்ளார். அங்கு நின்றவர்களை போலீஸ்காரர் தகாத வார்த்தையில் திட்டியதோடு டாஸ்மாக் ஊழியர் அவரை தடுத்த போது அவரையும் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசில் ராஜ் புகார் செய்தார். தகவலறிந்து வந்த போலீசார் ராஜகுருவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடமையை தவறாமல் செய்யும் எத்தனையோ போலீசார் இருக்கும்பட்சத்தில் இப்படி போலீஸ் உடையுடன் வந்து பாரில் மது அருந்தியதுமட்டுமில்லாமல் ரகளையும் ஈடுபட்டுள்ளார் என அங்கு இருந்தவர்கள் கிண்டல் செய்து கொண்டே கிளம்பினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்