கோவை : வேலை செய்யவந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் பால்ராஜ் (26 ). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் இல்லாத நிலையில், வேலைக்காக கோவைக்கு வந்துள்ளனர். பால்ராஜ் தனக்கு தெரிந்த உறவினர் நாகேந்திரன் என்பவர் மூலம் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள மொய்தீன் குட்டி (31) என்பவரிடம் வேலைக்காக வந்துள்ளார். பால்ராஜ் வேலைக்காக வந்தபோது தனது 21 வயது மனைவியையும் உடன் அழைத்து வந்துள்ளார். அன்னூர் அருகேயுள்ள பசூரில் டீ டைம் என்ற பெயரில் பேக்கரி நடத்தி வரும் மொய்தீன் குட்டி, ஊரடங்கு என்பதால் கடை மூடப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குமுடியும் வரை வீட்டில் இருங்கள் என தம்பதியினரை ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் வருமானம் இல்லாததால் பால்ராஜ் அதே பகுதியில் உள்ள மில் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனால் பால்ராஜின் மனைவி பகல் நேரங்களில் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்த 5-ஆம் தேதி பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டி மற்றும் அவரது நண்பர்களான சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக அப்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதேபோல 7-ஆம் தேதியும் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த பெண் தனது கணவர் பால்ராஜிடம் சொல்லாமல் இருந்துள்ளார். இதனிடையே தனது மனைவி சோகத்துடன் இருப்பதைப் பார்த்த பால்ராஜ் விசாரித்துள்ளார். அப்போது அப்பெண் தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் தனது மனைவியிடம் புகாரளிக்க கூறியுள்ளார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பெண் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் மொய்தீன் குட்டியின் நண்பர்களான பாலக்காட்டை சேர்ந்த சமீர் (28) மற்றும் சிகாபுதீன் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலைக்காக வந்த பெண்ணை மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.