பிளஸ்-டூ தேர்வு முடிந்த சந்தோஷம்; அடுத்த சில மணி நேரத்திலே நடந்த சோகம்
பிளஸ்-டூ தேர்வுகள் முடிந்த சந்தோஷத்தில் நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு, இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடலை மீட்ட வானூர் தீயணைப்புத் துறையினர்.
புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி இவரது மகன் மிதுன், (வயது 17). இவர் புதுச்சேரி பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வை எழுதிய மாணவர் மிதுன், இவரது நண்பர்களான பூர்ணாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆதேஷ், விஷ்வா, மூவரும் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் ஒட்டியுள்ள சின்ன பேட்டை பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குளிப்பதற்காக வந்துள்ளனர்.
இதில் முதலில் மிதுன் கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் குதித்த மிதுன் வெளியே வராததால் நண்பர்கள் இருவரும் உள்ளே குதித்து தேடி உள்ளனர். வெகு நேரம் ஆகியும் மிதுன் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியை நாடியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் ஆரோவில் காவல் நிலையத்திற்கும் மற்றும் வானூர் தீயணைப்பு துறை நிற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வானூர் தீயணைப்பு துறையினர் மாணவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டினார். இந்த நிலையில் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவன் மிதுன் உடலை வானூர் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

