Crime: ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி! கால்வாயில் வீசப்பட்ட கொடூரம் - பகீர் பின்னணி!
குருகிராம் ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகியில் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Crime: குருகிராம் ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகியின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி:
டெல்லி அருகே குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழகி திவ்யா பஹுஜா (27). இவர் ஜனவரி 1ஆம் தேதி தனது நண்பர் அபிஜித் சிங்குடன் வெளியே சென்றிருக்கிறார். அதன்பிறகு திவ்யாவை காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின்பேரில் தீவிர விசாரணை கொண்ட போலீசார், திவ்யா தனது நண்பரான அப்ஜித் சிங்குடன் குருகிராமில் உள்ள ஹோட்டலில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அப்ஜித் சிங்குடன் சேர்ந்து 2 பேர் உடல் ஒன்றை பெட்சீட்டில் சுற்றி, மேல் மாடியில் இருந்து தரை தளத்திற்கு இழுத்து வந்தது பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து, அந்த உடலை அவரது பிஎம்டபிள்யூ காரில் தூக்கிப் போட்டு எடுத்துச் சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து, இந்த பெண்ணை கொன்றது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அபிஜித் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் சிங் ஆகியோரை கைதான நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரான ரவி பங்கா தலைமறைவாக இருக்கிறார்.
என்ன காரணம்?
இவர்களிடம் நடத்திய விசாரணையில், அபிஜித் என்பவருக்கும் முன்னாள் மாடல் அழகி திவ்யா பகுஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையில், மாடல் அழகி திவ்யா பகுஜா, அபிஜித் சிங்குடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்திருக்கிறார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், மாடல் அழகி பகுஜா சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதை கொல்லப்பட்ட திவ்யா பகுஜாவின் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடல் குருகிராமில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாட்டியாலாவில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜாமீனில் வெளியே வந்த மாடல் அழகி:
கொலை செய்யப்பட்ட திவ்யா 7 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் சந்தீப்பின் காதலி இவர் ஆவார். கேங்ஸ்டர் சந்தீப் 2016ல் மும்பை ஹோட்டலில் காதலி திவ்யாவுடன் தங்கி இருந்தபோது, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இருப்பினும், போலி என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக பல போலீஸ் அதிகாரிகள் கைதாகினர். அதோடு, சந்தீப் கொலைக்கு உதவியதாக திவ்யாவும் கைது செய்யப்பட்டு 7 ஆண்டு சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜாமீனில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.