Crime: அசந்த நேரத்தில் கைப்பையை ஆட்டையப்போட்ட திருடன்; செல்போன் சிக்னலால் சிக்கிய பரிதாபம்
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையில் வைத்திருந்த 9 சவரன் நகை, இரண்டு செல்போன் மற்றும் 5000 ரூபாய் பணத்தை திருடி சென்ற நபரை 2 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ராதாநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மனைவி 62 வயதான மைதிலி. இவர் தனது உறவினர் வீட்டிக்கு செல்வதற்காக பல பைகளுடன் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் பூ வாங்கி அதனை தனது தலையில் வைத்து கொள்ளுவதற்காக தன் கையில் வைத்திருந்த மணி பர்ஸை தரையில் வைத்துள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் மைதிலி தரையில் வைத்திருந்த கைப்பையை, வெகு இயல்பாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து லாவகமாக நழுவினார். சிறிது நேரம் கழித்து கீழே பார்த்தபோது கைப்பை காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்த மைதிலி பதற்றம் அடைந்து, அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவரது கைப்பை கிடைக்காததால், மயிலாடுதுறை பேருந்து நிலையம் வாசலில் உள்ள போலீஸ் பீட்டில் உள்ள காவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து, பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவு பார்த்த போது அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரது கை பையை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் பேருந்தில் ஏறி சீர்காழி நோக்கி செல்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மைதிலியின் செல்போன் சிக்னலை வைத்து சீர்காழி நோக்கி விரைந்த தனிப்படை போலீசார் அங்கு ஒயின்ஷாப்பில் மது அருந்திக் கொண்டிருந்த சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பதும், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து மைதிலியின் 9 சவரன் நகை மற்றும் 5000 ஆயிரம் ரொக்கம் அடங்கிய கைப்பையை திருடி கொண்டு பேருந்தில் ஏறி சீர்காழி வந்து மது அருந்தி கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சுவாமிநாதனை கைது செய்து, ஒன்பது சவரன் நகை இரண்டு செல்போன் மற்றும் ரொக்க பணத்தினை கைப்பற்றி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருட்டு போன இரண்டு மணி நேரத்தில் விரைந்து சென்று திருடனை பிடித்து திருடுபோன பொருட்களை மீட்ட தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்பந்தல் கடைவீதியில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் ஊராட்சி சங்கரன்பந்தல் கடை வீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5000 நிவாரண உதவி வழங்கிட கோரியும், இலுப்பூர் வடக்கு தெருவில் உள்ள உட்புறச் சாலையை மேம்படுத்தி புதிய சாலை அமைக்க கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 35000 இழப்பிடு தொகையை காலதாமதம் இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும், ஊருக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வடியவைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இலுப்பூர் ஊராட்சி உத்திரங்குடி ஊராட்சியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக பொறையாரில் இருந்து சங்கரன்பந்தல் வழியாக மயிலாடுதுறை செல்லக்கூடிய சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.