மயிலாடுதுறையில் வாட்ஸ் அப் குழு மூலம் சீட்டு விளையாடிய கும்பல் - சிக்கியது எப்படி..?
வாட்ஸ் அப் மூலம் ஒன்றிணைந்து பல லட்சம் ரூபாயை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாட்ஸ்-ஆப் குழு மூலம் ஒன்றிணைந்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்டுவந்த சூதாட்டக் கும்பலை சேர்ந்த 14 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5.15 லட்சம் பணம், 3 கார்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதனை அடுத்து, அவரது உத்தரவின்பேரில் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தனிப்படை காவலர்கள் இதுகுறித்து விசாரணையில் ஈடுப்பட்டனர்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் உள்ள ஏ.கே.பி. திருமண மண்டபத்தில் பலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒன்று கூடியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். இதனை கண்ட சிலர் அங்கிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பியோடினர். மீதமிருந்த 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5.15 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், 3 கார்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, பிடிபட்ட 14 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தப்பியோடிய சிலரையும் தேடி வருகின்றனர். விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கடலங்குடி அரண்மனைத் தெருவைச் சேர்ந்த துரை மகன் 38 வயதான சரவணன் என்பவர் வாட்ஸ்அப் குழு மூலம் மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாவட்டத்தில் இரவு நேரங்களில் பல லட்சம் ரூபாயை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும், அவர்களில் பெரும்பாலானோர் காய்கறி வியாபாரம், உணவகம் வைத்து நடத்துபவர்கள் என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
மேலும், இந்த சம்பவத்துக்கு மயிலாடுதுறை காவல்துறையைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்ததுள்ளது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து சூதாடுவதற்காகவே வாட்ஸ் அப் மூலம் ஒன்றிணைந்து பல லட்சம் ரூபாயை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.