மயிலாடுதுறையில் பயங்கரம்... மருத்துவமனையில் பெண் நோயாளியை கடுமையாக தாக்கிய 2 ஆண்கள்
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே சிகிச்சையில் இருந்த பெண் நோயாளியை இரண்டு ஆண்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உறவினர்களால் தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியை மீண்டும் மருத்துவமனைக்குள் வந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பெண்ணின் மீது தாக்குதல் நடத்திய தந்தை மகனை இருவரையும் மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு சென்ற பெண்மணி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அவையாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் 53 வயதான செல்வராஜ். இவரது மனைவியின் சகோதரி ஜெயலட்சுமி கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வந்தவர். இந்நிலையில் தனது குடும்ப சூழல் காரணமாக தனது 14 வயது மகளை செல்வராஜ் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.

செல்போன் மூலம் ஏற்பட்ட பிரச்சினை
இந்நிலையில் சமீபத்தில் ஜெயலட்சுமியின் மகள் தொடர்ச்சியாக செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், இதனால் செல்வராஜ் குடும்பத்தினர் அதனை கண்டித்துள்ளனர். இதனை ஜெயலட்சுமியின் மகள் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக ஜெயலட்சுமி செல்வராஜை செல்போனில் தொடர்பு கொண்டு திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் இருந்து கடந்த 30 -ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வந்த ஜெயலட்சுமியை செல்போனில் திட்டியது குறித்து வாக்குவாதம் செய்து ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று செல்வராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது.
TVK-Congress alliance: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!

மருத்துவமனை வளாகத்தில் நோயாளி மீது தாக்குதல்
இதில் காயமடைந்த ஜெயலட்சுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் செல்வராஜின் மகன் சூர்யா இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலட்சுமியிடம் போலீசில் வீட்டை காட்டி கொடுத்ததாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த செல்வராஜ், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலட்சுமி கடுமையாக தாக்கியுள்ளனர்.
தந்தை, மகன் கைது
இதனை அருகில் இருந்தவர் செல்போனில் படம்பிடிக்க பிடித்தவரையும் தாக்க முற்பட்டனர். தற்போது ஜெயலெட்சுமியை இருவர் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் செல்வராஜ் மற்றும் அவரது மகன் 27 வயதான சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்னை இரண்டு ஆண்கள் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்கிய சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு மருத்துவமனையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், ஏராளமானோர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் வார்டில் இரண்டு ஆண்கள் உள்ளே புகுந்து சிகிச்சையில் இருக்கும் பெண்னை தாக்கிய சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது என்றும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















