(Source: ECI/ABP News/ABP Majha)
பூங்காவில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் - நேரில் சென்று அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பூங்காக்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்கள், பாழடைந்த மண்டபங்களில் சுற்றித் திரிகின்றனர். மேலும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர்களில் ஒட்டுவதற்கு பயன்படும் அனோபாண்டை பசையினை ஒரு குழலில் அடைத்து அதனை குலுக்கி உருவாகும் காற்றை சுவாசித்து அதன் மூலம் புதுவிதமான போதையை சில மாணவர்கள் ஏற்றிக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி கூல் லிப், கஞ்சா போதைக்கும் அடிமையாவதாகவும் பலத்த குற்றச்சாற்று எழுந்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலர் வகுப்புகளை கட் அடித்துவிட்டு நகராட்சி பூங்காவில் சுற்றித்திரிந்தனர். அப்போது பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் என்பவர் உதவிக்கு மற்றொரு ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மாணவர்களை விரட்டி பிடித்து பள்ளிக்கு அழைத்து சென்றார். அதிலும் பாதி மாணவர்கள் ஆசிரியரை கண்டவுடன் பூங்கா சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, அரசு பள்ளிகளில் வெளியூர் மாணவர்கள் வந்து பயில்கின்றனர். அவர்கள் படிப்பு குறித்து பெற்றோர் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் தண்டனை மாணவர்களுக்கு வழங்கும் விதத்தில் விதிகளை திருத்த வேண்டும் என்றும், தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடந்து வருவதாகவும், மாணவர்கள் அனோபாண்டை ஒரு குழலில் அடைத்து அதனை குலுக்கி உருவாகும் காற்றை சுவாசித்து அதன் மூலம் புதுவிதமான போதையை சில மாணவர்கள் ஏற்றிக் கொள்வதாகவும் வேதனை தெரிவித்து இருந்தனர்.
இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்த உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதனிடம் மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொண்டார். மாணவர்களை ஒழுங்காக கண்காணிப்பதாகவும், மாணவர்கள் மீது பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் பூங்காக்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் தினமும் ஒரு முறை ரோந்து சுற்றி பள்ளி மாணவர்களை அறிவுரை கூறி அனுப்ப வேண்டும் என்று அப்போது ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தினால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வகுப்புகளை கட்டடித்து விட்டு ஊர் சுற்றும் மாணவர்களை கண்டிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் பூங்கா உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களில் போதையில் மயங்கிக் கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்த புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை நகர்பகுதியில் டெங்கு ஒழிப்புப் பணி குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு மையத்தில் அமைந்துள்ள வரதாச்சாரியார் நகராட்சி பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிகளை புறக்கணித்து, சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அழைத்து அறிவுரை கூறிய மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட காவலர்களை அழைத்து, பூங்கா உள்ளிட்ட மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் தினசரி ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தினார்.