தந்தையை கத்தியால் குத்திய மகன்! சொத்து தகராறா? மதுபோதையில் நடந்த கொலையா? மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே மேலப்பாதி கிராமத்தில் தந்தையை முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் கத்தியால் குத்திக் கொலை நிலையில், மகனை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கா தங்கையை திருமண செய்த நபர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி வாய்க்காங்கரைத் தெருவை சேர்ந்தவர் 52 வயதான சிவக்குமார். இவர் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோயில் எதிரே சாலையோரம் கடை அமைந்து கரும்பு ஜுஸ் விற்பனை செய்து வந்தார். இவருக்கு 50 வயதான ஜெயசெல்வி, 40 வயதான ரேவதி ஆகிய இரண்டு ( இருவரும் சகோதரிகள்) மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 26 வயதான சிவசர்மா, 25 வயதான சபரி கிருஷ்ணன், 24 வயதான அபினேஷ் ஆகிய மூன்று மகன்களும், 20 வயதில் சிவப்பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அபினேஷ் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இரண்டாவது மனைவி ரேவதிக்கு 14 வயதில் சிவவர்மா, 12 வயதில் தீபலெட்சுமி, 9 வயதில் கலியவரதன் என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சிவக்குமார் கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டாவது மனைவி ரேவதியுடன் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோயில் எதிரே வாய்க்கால் ஓரம் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.
குடும்ப தகராறு
இந்நிலையில் முதல் மனைவி ஜெயசெல்வியின் மூத்த மகன் சிவசர்மா பட்டா கேட்டு தனது தந்தை சிவக்குமாரிடம் ஏற்கனவே பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று மாலை சிவக்குமார் கரும்பு ஜுஸ் வியாபாரம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு அவரது முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் இருந்த அபினேஷ் வந்து, தனது தந்தை சிவகுமாரிடம் பட்டா கேட்டு பிரச்சினை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபினேஷ், தான் மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து தந்தை சிவக்குமாரை கொடூரமாக குத்தியுள்ளார். இதில் இதயம் மற்றும் குடல் வெளியே வந்தநிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து அவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் தீவிர விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிவக்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அபினேஷை கைது செய்து செம்பனார் கோயில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தில் சொத்து பிரச்னையால் இந்த கொலை நடந்ததா? அல்லது தந்தை செலவுக்கு பணம் கொடுக்காமல் தரகுறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் கொலை நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதி மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















