Crime : மனைவி மீது சந்தேகம்..! 2 மாதக் குழந்தையை தரையில் வீசிக் கொன்ற கணவன்..! பஞ்சாபில் கொடூரம்
குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கருதி 2 மாதக் குழந்தையை தரையில் வீசி கொடூரமாக கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று லூதியானா. இந்த மாநிலத்தில் உள்ள எல்.ஐ.ஜி. துக்ரி குடியிருப்பில் வசித்து வருபவர் அங்கித் பிரிஷ்த். இவர் கடந்தாண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மோனிகாவிற்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் ஆகும். அங்கித்திற்கு இந்த திருமணம் முதல் திருமணம் ஆகும்.
அங்கித்திற்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுவிற்கு அடிமையான அங்கித் கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார். மது, கஞ்சாவிற்கு அடிமையான அங்கித் முறையாக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், மோனிகாவிற்கு தொல்லை அளித்தும் வந்துள்ளார்.
மோனிகாவை திருமணம் செய்ய அங்கித் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தடையை மீறி திருமணம் செய்த அங்கித் – மோனிகா தம்பதியினர் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அங்கித் குடும்பத்தினர் முயற்சித்தாக கூறப்படுகிறது. மேலும், மோனிகா 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அந்த கருவை கலைக்க அங்கித் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். மேலும், அந்த குழந்தைக்கு அங்கித் தந்தை கிடையாது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சூழலில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோனிகாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மே 2-ந் தேதி அங்கித் குடும்பத்தினர் அங்கித்திடம் மோனிகாவை விட்டு வருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆத்திரத்தில் இருந்த அங்கித் 2 மாத குழந்தை என்றும் பாராமல் அந்த குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி வீசியுள்ளார். இதனால், சில மணி நேரம் சுயநினைவின்றி குழந்தை இருந்துள்ளது. பின்னர். குழந்தையின் உடல் நீல நிறமாக மாறியுள்ளது. மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச்சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மே 2-ந் தேதி முதல் அங்கித் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். மேலும், செல்போன் மூலமாக மோனிகாவிற்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். மோனிகா அளித்த புகாரின் பேரில் அங்கித்தை போலீசார் கைது செய்து அவர் மீது 304-ஏ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சந்தேகத்தால் 2 மாத குழந்தையை தரையில் வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்