செட்டப் அம்மா... செட்டப் சித்தி... 6 பெண்களை திருமணம் செய்த நெல்லை வின்சென்ட் கைது!
நெல்லையில் இளம் பெண்களை ஏமாற்றி 6 முறை திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை என்.ஜி.ஓ.பி காலனி உதயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்ற ஜோசப்ராஜ். இவரது மகள் விஜிலாராணி . இவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக திசையன் விளை சுவிஷேசபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் மூலம் TDTA திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட்பாஸ்கர் என்பவருக்கும் விஜிலா ராணிக்கும் கொரோனா ஊரடங்கு காலமான 2020 ஜூலை 15-ந்தேதி திருமண புரோக்கர் இன்பராஜ் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பாக மாப்பிள்ளையின் சித்தி எனக்கூறி தாமரைச் செல்வியும், திருமண புரோக்கரின் இன்பராஜ் அவரது மனைவி என கூறி ஜோதி ஆகியோர் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டு உள்ளனர். திருமணத்தின் போது பெண்வீட்டார் சார்பில் 40 பவுன் தங்க நகையும் , 3 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூத்துக்குடி சாயர்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகையை எடுத்து சென்று தலைமறைவாகி உள்ளார்.
இதனையடுத்து விஜிலாராணி தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவரை தேடி விசாரித்த போது திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பாக வந்த யாரும் அவர்களது உறவினர்கள் இல்லை என்றும், மாப்பிள்ளையின் உண்மையான பெயர் வின்சென்ட் ராஜன் இல்லை வின்சென்ட் பாஸ்கர் எனவும் தெரிய வந்துள்ளது. உடனடியாக தந்தை கணேசன் பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது, வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே பல இளம் பெண்களை ஏமாற்றி 5 முறை திருமணம் ஆனவர் என்றும் அதே போன்று விஜிலா ராணியையும் 6 வதாக ஏமாற்றி திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வின்சென்ட் பாஸ்கர் மீது 498(A), 406, 419, 420, 294(b), 506(i ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு வின்சென்ட் பாஸ்கரை தேடிவந்த நிலையில் போலீசார் திசையன்விளை அருகில் உள்ள சுவேசபுரத்தில் வைத்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சுவிசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண் தனக்கு தாயாகவும் , தாமரைச் செல்வி என்ற பெண் சித்தியாகவும் நடிக்க வைத்து புரோக்கர் கூறும் இடத்தில் பெண்களைப் பார்த்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து வின்சென்ட்பாஸ்கர் , மற்றும் பிளாரன்ஸ், தாமரைச்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் . மேலும் தலைமறைவாக உள்ள திருமண புரோக்கர் இன்பராஜை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 6 இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.