Crime: 12 ஆம் வகுப்பு மாணவி 8 மாத கர்ப்பம்! பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரி கைது!
12 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரி காளிதாசை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தாலுக்கா மூங்கிலேரியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு வயது 23. காளிதாஸ் அதே பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 1 ½ வயதில் அழகான பெண் குழந்தை உள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன் அவர் வீட்டில் இருக்கும் போது குழந்தையுடன் விளையாட அருகில் வசித்து வந்த இளம் பெண் வீட்டிற்கு வந்துள்ளார். 16 வயதான 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி குழந்தையுடன் விளையாட்டிக் கொண்டிருக்கும் போது, காளிதாஸ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்லாமல் மறைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நிலை சீராக இல்லாமல் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த பெற்றோர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் அதிர்ச்சியில் உரைந்து போனார். அந்த பெண் 8 மாதம் கருவுற்று இருப்பதாக பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பெற்றோர்கள் மனமுடைந்து போனார்கள். பின் அந்த பெண்ணிடம் விசாரித்த போது 8 மாதங்களுக்கு முன் காளிதாஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பெற்றோர் அந்த பெண்ணை அழைத்துச் சென்று அருகில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காளிதாஸை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சூழலில் நாளை முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளதால் அந்த பெண் பொது தேர்வு எழுதுவாரா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.