நாங்குநேரியை போல கோவில்பட்டியிலும் கொடூரம்; பட்டியலின பள்ளி மாணவர் மீது தாக்குதல் - நடந்தது என்ன..?
கோவில்பட்டி அருகே பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்-மாணவர்களின் சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் மீது தாக்குதல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது மகன் ஹரிபிரசாத்(17). இவர் பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர். கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு காமர்ஸ் ( கணக்குப்பதிவியல்) பிரிவில் படித்து வருகிறார். அதே பள்ளியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகுரு (17), ஷேமந்த் குமார் (17) ஆகியோர் 11ம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே ராஜகுரு, ஹேமந்த் குமார் இருவரும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாணவர் ஹரி பிரசாத் இருவரும் சண்டை போடுவதை தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜகுரு 10 பேரை அழைத்துக்கொண்டு இரவில் லெட்சுமிபுரம் சென்று ஹரி பிரசாத்தை ஜாதி ரீதியாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஹரி பிரசாத் காயம் அடைந்தார். அவரது செல்போன் முற்றிலுமாக சேதம் அடைந்தது. காயம் அடைந்த ஹரிபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள், இரண்டு கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.