மயிலாடுதுறை வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 13 பேர் கைது
வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நகர செயலாளர், விசிக முன்னாள் நகர செயலாளர் உள்ளிட்ட 12 பேரை 14 நாட்கள் காவல் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரின் 31 வயதான மகன் கண்ணன். ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இதுகுறித்து, கதிரவன் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கண்ணன் மீது ஏற்கெனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவிட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுதலை ஆகி வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் கண்ணன் தனது நண்பர்களான நல்லத்துக்குடியைச் சேர்ந்த 19 வயதான ரஞ்சித், டபீர் தெருவைச் சேர்ந்த 22 வயதான திவாகர் ஆகியோருடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளார். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணன் உள்ளிட்ட மூவரையும் வழிமறித்த கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன், அஜித், அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து, கண்ணனுடன் வந்த நண்பர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து அருகில் இருந்த கலைஞர் காலணியில் இருந்து அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினர்.
இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவலர்கள், கண்ணனின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து கதிரவன் உள்ளிட்ட 20 பேரை தேடிவந்தனர். இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கதிரவன், சேது, சந்தோஷ், ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரை, குணசேகரன், பிரபாகரன் மற்றும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர் ஒருவன் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஞ்சிய நபர்களை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து பதற்றத்தை தணிக்க மயிலாடுதுறை நகர் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். தொடர்ந்து உறவினர்களுடன் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களில் 18 வயது பூர்த்தியடையாத காரணத்தால் சிறுவனைத் தவிர மீதமுள்ள 12 பேரை மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் 2 திருமதி கலைவாணி முன்பு நேற்று இரவு ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள குற்றவாளிகளை தேடிவரும் காவல்துறையினர் 18 வயது நிரம்பாத சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்காக நீதிமன்றத்தில் தனியே இன்று ஆஜர் படுத்த உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய துரைக்கண்ணு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நகர செயலாளர் என்பதும் அவரது உடன் பிறந்த சகோதரரான பிரபாகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிபதி முன்பு ஆஜர் படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி குடியிருப்புகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.