Crime: செலவுக்கு பணம் கொடுக்காததால் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவர்
வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை பகுதியில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாங்க் புத்தகம் மற்றும் ஆவணங்களை எடுத்து வைத்துக் கொண்டதால் ஆத்திரமடைந்து கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாட்டை சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் விஸ்வநாதன் (46). இவரது அக்கா சுந்தராம்பாள் (65). அவரது வீட்டுக்காரர் பாலசுப்பிரமணியன். விஸ்வநாதன் தனது அக்கா மகள் தனலட்சுமியையே திருமணம் செய்துள்ளார்.
தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு விஸ்வநாதன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் இதை கூறி வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதில்லையாம். இதுகுறித்து தனலட்சுமி தனது அம்மா சுந்தராம்பாளிடம் கூறி வேதனைப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் தீபாவளியன்று தென்னந்தோப்பிலிருந்து வரும் வருமானத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி தனலட்சுமியும், சுந்தராம்பாளும் வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்களை எடுத்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்களை கேட்டு தனது அக்கா சுந்தராம்பாள் மற்றும் தனலட்சுமியிடம் பிரச்னை செய்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் விஸ்வநாதன் கட்டையால் தனது அக்கா மற்றும் மனைவியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதில் தனது மாப்பிள்ளைக்கு ஆதரவாக பாலசுப்பிரமணியன் செயல்பட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி மற்றும் சுந்தராம்பாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி நேற்று இறந்தார். சுந்தரம்பாள் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் சுந்தராம்பாளிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசார் தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை தேடி வந்தனர். பின்னர் அவர் மறைந்திருந்த இடம் பற்றி தெரிய வந்த நிலையில் விரைந்து சென்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அதிராம்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருதரப்பினர் மோதல் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி சால்வன்பேட்டை காலனி தெருவில் ஒரு வீட்டாருக்கும், ஊர் மக்களுக்கும் கோவில் கட்டுவதில் இடப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீரமணி மகன் வடிவழகன் குளிக்க மோட்டார் செட்டிற்கு செல்லும் பொழுது முன் விரோதம் காரணமாக அவரை அரிவாள் மற்றும் கட்டை, கற்களால் சிலர் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த வடிவழகன் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வடிவழகன் தாயார் சசிகலா தோகூர் போலீசில் புகார் செய்தார். அதில் காலனி தெருவை சேர்ந்த மதியழகன் மகன்கள் சூர்யா, ராஜராஜன், பாரதி, ராசு, அவரது மகன் ரஞ்சித், மதியழகன், சரத்குமார், கோபி ஆகியோர் தாக்கியதில் தனது மகன் காயம் அடைந்தார் என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் தோகூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப் இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை ஆகியோர் வழக்கு பதிவு செய்து கோபி, சரத்குமார், பாரதி ஆகியோரை கைது செய்தனர்.
அதுபோல ராசு மனைவி செல்வி கொடுத்த புகாரின் பெயரில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், வடிவழகன், அஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.