Crime: அடுத்தடுத்து பெண் குழந்தைகள்.. ஒரு மாதமாக மனைவியை பட்டினி போட்ட கணவன் குடும்பத்துடன் கைது
ஆந்திர மாநிலத்தில் மனைவியை ஒருமாதமாக அறையில் அடைத்து சித்திரவதை செய்த கணவர் குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மனைவியை ஒருமாதமாக அறையில் அடைத்து சித்திரவதை செய்த கணவர் குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் சிசு கொலை என்பது எவ்வளவு தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதுதொடர்பாக என்னதான் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு குற்றச்சம்பவம் ஆந்திர மாநிலத்தை அதிர வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் அங்குள்ள பழமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சபீஹா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனிடையே இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட சந்த் பாஷா பெண் குழந்தைகள் பிறந்ததால் சபீஹா மீது கடும் கோபம் கொண்டு சண்டையிட தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.
இதனால் அடிக்கடி அம்மா வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விடும் சபீஹா அழுது புலம்புவதும், பின்னர் போலீசில் புகாரளித்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று மீண்டும் பாஷா - சபீஹா ஒரே வீட்டில் வாழ்வதுமாக இருந்து வந்துள்ளது. இப்படியான சூழலில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற முடிவுக்கு சந்த் பாஷா குடும்பம் வந்துள்ளது. இதனால் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து மணமுடிக்க முயற்சித்துள்ளனர்.
அதற்கு இடையூறாக இருந்த சபீஹாவை மாடியில் உள்ள சிறிய அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார்கள். அவருக்கு உணவு தராமல் கை விரல்களை உடைத்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். சபீஹா அந்த அறையில் நீண்ட நாட்களாக சபீஹாவை வெளியே பார்க்காத அக்கம் பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் பழமனேர் போலீசார் உதவியுடன் சந்த் பாஷா வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்,
அங்கு குற்றுயிராக கிடந்த சபீஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாஷா குடும்பத்தினரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.