மயிலாடுதுறை: டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியர்.. பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர்..
மயிலாடுதுறை அருகே அரசு பள்ளி ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். முப்பத்தி நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
பள்ளியின் விலங்கியல்துறையில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் 36 வயதான செந்தில். இவர் நாட்டுநலப்பணி திட்ட அலுவலராகவும், சமூக பணியாற்றியும் வருகிறார். இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வரும் 56 வயதான சித்ரா என்பவர் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வதாகவும், செருப்பு அணிந்துகொண்டு ஆசிரியர்கள் தலைமையாசிரியர் அறைக்கு வரக்கூடாது, வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை வேறு பணி செய்யச்சொல்வது போன்ற செயல்களால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்ந சூழலில் விலங்கியல்துறை ஆசிரியர் செந்தில் செருப்பு அணிந்து கொண்டு தலைமையாசிரியர் அறைக்கு வரக்கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் செந்தில் சமர்ப்பித்த பாடக்குறிப்பேட்டில் தலைமையாசிரியர் சித்ரா தொடர்ந்து கையெழுத்து போடாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முதுகலை ஆசிரியர் செந்தில் இன்று பள்ளியில் அளவுக்கதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தள்ளார். அதனை கண்ட சக ஆசிரியர்கள் செந்திலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியரை மருத்துவமனையில் பார்க்க வந்த ஆசிரியர்கள் மற்றம் சங்கத்தினர் ஊழியர்கள் மீது விரோதப்போக்கை கடைபிடிக்கும் தலைமையாசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமையாசிரியரின் தொந்தரவால் ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல், மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்புகொண்டு தீர்வு காண வேண்டுமெனவும், இல்லையெனில் இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் நடைபெறுகிறது, பலரது வாழ்க்கை பாழாகிறது எனவும் பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பாலையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்