Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
பேத்தியின் கணவர் 80 வயது மூதாட்டியை குடிபோதையில் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்ககவுண்டர். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு ராமு என்ற ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரங்ககவுண்டரும், மகன் ராமுவும் இறந்துவிட்டனர். இதனால், மூதாட்டி வள்ளியம்மான், தனது மகன் ராமுவின் மகனான பேரன் பாலகிருஷ்ணன் பராமரிப்பில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வள்ளியம்மாள், தனது வீட்டின் முன் பலத்த வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேரன் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவரும், உறவினர்களும் வந்து பார்த்தனர். பின்னர், எடப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சங்ககிரி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மூதாட்டி வள்ளியம்மாளின் வீட்டிற்கு அவரது கடைசி மகள் சின்னபொண்ணுவின் மகளை திருமணம் செய்த விக்னேஷ் சென்று வந்தது தெரியவந்தது. இரவோடு இரவாக விக்னேசை போலீசார் மடக்கிப் பிடித்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மூதாட்டியை குடி போதையில் பலாத்காரம் செய்ய முயன்றபோது கூச்சலிட்டதால், வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை குறித்து விக்னேஷ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியது, மூதாட்டி வள்ளியம்மாளின் மகள் சின்னபொண்ணுவின் மகளை திருமணம் செய்த பேரன் விக்னேஷ், அடிக்கடி பாட்டி என்ற முறையில் அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடி போதையில், ஆலச்சம் பாளையத்திற்கு வந்துள்ளார். அப்போது பாட்டி வள்ளியம்மாளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் பாட்டி வள்ளியம்மாளை தவிர வேறு யாரும் அங்கு இல்லாத தால், திடீரென போதையில் அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மூதாட்டி வள்ளியம்மாள் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனால், நடந்த சம்பவத்தை வெளியே சொல்லி அவமானப்படுத்தி விடுவார் என்பதால், கழுத்தை நெரித்துள்ளார். பிறகு சாகாமல் போய்விடுவார் எனக்கருதி, அருகில் கிடந்த அரிவாளால் தாடையோடு கழுத்தில் வெட்டி படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார், என விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொலையுண்ட மூதாட்டி வள்ளியம்மாளின் உடல், பிரேதப்பரி சோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் நேற்று பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கைதான விக்னேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பேத்தியின் கணவர் 80 வயது மூதாட்டியை குடி போதையில் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.