‛நாங்கள் நிரபராதிகள்...எந்த குற்றமும் செய்யவில்லை ஐயா...’ கோகுல்ராஜ் கொலை குறித்து நீதிபதியிடம் முறையிட்ட குற்றவாளிகள்!
இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நிலையில், குற்றவாளிகளிடம் நீதிபதி கருத்துக்களை கேட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தண்டனை வழங்கப்பட உள்ளது குறித்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தை நீதிபதி சம்பத்குமார் கேட்டார்.
குற்றவாளிகளான யுவராஜ் உள்ளிட்ட 10பேரும் தாங்கள் நிரபராதி எனவும், எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் தெரிவித்தனர்.
‛நான் நிரபராதி, எந்த குற்றமும் செய்யவில்லை ஐயா’ என யுவராஜ், அருண், குமார்@சிவகுமார் ஆகியோர் கூறினர். அதே போல சதீஸ்குமார் மற்றும் ரகு ஆகியோர், ‛வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,’ என்றனர்.
ரஞ்சித் என்பவர், ‛ நான் நிரபராதி, நான் எந்த குற்றமும் செய்யவில்லை,’ என்றார்.
செல்வராஜ் என்பவர், ‛நான் நிரபராதி, எந்த குற்றமும் செய்யவில்லை,’ என அதே கருத்தை கூறினார். சந்திரசேகரன் என்பவர், ‛எந்த குற்றமும் செய்யவில்லை நான் நிரபராதி,’ என்று கூறினார். பிரபு என்பவர், ‛நான் நிரபராதி...’ என்றார். கிரிதர் என்பவர், ‛நான் நிரபராதி எந்த குற்றமும் செய்யவில்லை,’ என்றார். அதன் பின் கருத்து தெரிவித்த கோகுல்ராஜ் தாயார் சித்ரா, ‛கொடுமையான வன்கொடுமை. இனிமேல் இதுபோல் நடைபெறாத வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்,’ என நீதிபதியிடம் கூறினார்.
வழக்கு கடந்து வந்த பாதை :
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், இருவரும் கோயிலுக்கு சென்றபோது 2015 ஜூன் 23-ஆம் தேதி கோகுல்ராஜ் மாயமானார்.
கோகுல்ராஜை காணவில்லை என அன்றே திருச்செங்கோடு காவல் நிலையத்தில் கோகுல்ராஜின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 2015 ஜூன் 24-ஆம் தேதி பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கோகுல்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்காமல் முழு விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தி ஜூன் 25 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து, கோகுல்ராஜ் மரண வழக்கை திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, 2015 செப்டம்பர் 18ம் தேதி கோகுல்ராஜ் மரண வழக்கை விசாரித்த வந்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது முகாம் அலுவலக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அதற்கு அடுத்த நாளான 19 ம் தேதி கோகுல்ராஜ் மற்றும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
கோகுல்ராஜ் மரண வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோரை தேடிவந்த நிலையில் யுவராஜ் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
யுவராஜ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 2015ம் தேதி அக்டோபர் 11 ம் தேதி அன்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 17 பேரை நாமக்கல் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, 2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி கோகுல்ராஜ் மரண வழக்கில் 1,318 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இதனால் இந்த வழக்கை வேறு ஊருக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து இவ்வழக்கை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் உயிரிழந்த நிலையில் யுவராஜ் உட்பட 15 பேர் சிறையில் உள்ளனர்.
அதன்பிறகு, 2019ம் ஆண்டு மே மாதம் 8 ம் தேதி முதல் இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் 106 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது வழக்கின் விசாரணை கடந்த 9ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. அதில், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று குற்ற தண்டனை குறித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.