விழுப்புரத்தில் போலீசார் அதிரடி; பேருந்தில் கடத்தி வந்த கஞ்சா சாக்லெட் - சிக்கிய வடமாநில தொழிலாளர்கள்
விழுப்புரத்தில் பேருந்தில் கடத்தி வந்த ஐந்தரை கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல். வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது.
விழுப்புரத்தில் பேருந்தில் கடத்தி வந்த ஐந்தரை கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுக்கு ரகசியத தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், இன்று மாலை விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் 924 பாக்கெட்டுகளில் சாக்லெட்டுகளும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட 25 கிலோ எடையிலான பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். அதோடு அந்த சாக்லெட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது, ஒரு பாக்கெட்டில் 40 சாக்லெட் வீதம் 36,960 சாக்லெட்டுகள் இருந்ததும், அது கஞ்சா சாக்லெட் என்பதும் கண்டறியப்பட்டது.
விசாரணையில் பிடிபட்ட 3 பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த்குமார் மகன் அஜய்குமார், திரில்னுச்சான் மகன் பலராம்பாரிக், உமாகந்தபாரிக் மகன் உக்ரேசன் பாரிக் என்பதும், தற்போது புதுச்சேரி மாநிலம், திருபுவனை பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள உணவகங்கள், இரும்புக் கம்பெனிகளில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் இவர்கள் 3 பேரும் அவ்வப்போது, சொந்த மாநிலங்களுக்கு செல்லும்போது, அங்கிருந்து கஞ்சா சாக்லெட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, தமிழகத்தின் பல இடங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதும், அதுபோல்தான் தற்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வந்து, பின்னர் செங்கல்பட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக, பேருந்தில் கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அஜய்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ஐந்தரை கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் 25 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். தொடர்ந்து, கைதான 3 பேரையும் போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வேடம்பட்டில் உள்ள விழுப்புரம் மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லெட்டுகள், புகையிலைப் பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு, அதனைப் பிடித்த போலீசாரைப் பாராட்டினார்.
சொந்த மாநிலத்தில் ஒரு சாக்லெட் ரூ.10 வீதம் வாங்கி வந்து, தமிழகத்தில் அதை 100 ரூபாய் என்று விற்பனை செய்து வருவதும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லெட் வகைகளை போன்றே இந்த கஞ்சா சாக்லெட்டும் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கஞ்சா சாக்லெட்டை பாலில் கலந்து இரவில் குடித்தால் 24 மணி நேரம் வரை கஞ்சா போதை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.