பள்ளிகொண்டா அருகே ரூ.10 கோடி பறிமுதல்; 4 பேர் கைது - ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் பணம். நான்கு பேரை கைது செய்த காவல்துறை ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் பணம். நான்கு பேரை கைது செய்த காவல்துறை ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தின் வழியாக சென்னை, திருவண்ணாமலை, ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர். மேலும், வழிபறியிலும் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகன சோதனைகளிலும் , ரோந்து பணிகளிலும் அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணியின் போது மட்டும் வேலூர் பகுதியில் மட்டும் 4 திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வேலூர் அடுத்த பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஆட்கள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக காரின் அருகே சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருந்த 4 நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பண்டலை பிரித்து பார்த்தபோது அதில் பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கு உரிய ஆவணம் கேட்டனர். அதற்கு ஆவணம் இல்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆவணம் எதுவும் இல்லாததால் பண்டல் மூலம் லாரியில் ஏற்ற முயன்ற சுமார் 10 கோடி ரூபாய் பணத்தையும் காரையும், லாரியையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 நபர்களையும் கைது செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் பணத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிப்பட்ட நபர்கள் பணத்தை கேரளாவிற்கு கடத்த இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணண் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்பாக வேலூர் வருமான வரி துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. பிடிபட்ட பணம் ஹவாலா பணமா என்றும் காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வருகிறது.