மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்; அடுத்த விசாரணை மதுரையில்!
ஜூலை 3,4ஆம் தேதிகளில் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நடிகையை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு இரு நாட்கள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக துணை நடிகை, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மணிகண்டன் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மணிகண்டனை நீதிமன்ற காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, அடையாறு மகளிர் போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு இரண்டு நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 3,4ஆம் தேதிகளில் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் உதவியாளருக்கு முன் ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
மேலும், மணிகண்டனின் செல்போனை கண்டுபிடிக்கவும் அடையாறு மகளிர் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. போலீஸ் காவல் விசாரணையின் போது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் சில காலம் அமைச்சராக இருந்த அவரை, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். பின்னர், கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக புகார் அளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை இரண்டாவது திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், அவரால் மூன்று முறை தான் கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். ஆனால், தற்போது தன்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
நடிகை சாந்தினியின் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது சென்னை அடையாறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் மணிகண்டன் தலைமறைவானார்.
பின்னர், அவரை போலீசார் கடந்த 20ந் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் நடிகையும், அவரும் ஒருவரை ஒருவர் தெரிந்தே பழகியதால் மணிகண்டன் மீதான பாலியல் குற்றச்சாட்டு பிரிவில் இருந்து இந்த வழக்கை மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரை சைதாப்பேட்டை சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகை சாந்தினியின் பாலியல் வன்குற்றப் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!