கிரிக்கெட் விளையாட பந்து எடுத்து செல்வதாக கூறி நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது
சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் உருண்டையாக இருந்த உருண்டை குறித்து கேட்ட போது, கிரிக்கெட் விளையாட பந்து எடுத்துச் செல்வதாக அந்த வாலிபர் போலீசாரிடம் கூறி உள்ளார்
புதுச்சேரியில் சமீப காலமாக வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. எதிரிகளை வெடிகுண்டுகள் வீசி கொலை செய்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. வெடி குண்டு கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் துத்திப்பட்டு வழுதாவூர் சாலையில் பத்மாவதி நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை மறித்து விசாரணை மேற் கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அவரது உடைமைகளை சோதனை செய்தார். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் உருண்டையாக மர்ம பொருள் இருந்தது. இது குறித்து கேட்டபோது, கிரிக்கெட் விளையாட பந்து எடுத்துச் செல்வதாக அந்த வாலிபர் போலீசாரிடம் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் டேங்க் கவரில் இருந்த பொருளை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசிடம் வசமாக சிக்கியதை உணர்ந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பெரியசாமி மகன் சுமன் என்ற பிரதீப் (29) என்பது தெரிய வந்தது. இவர் மீது 5 கொலை வழக்கு 5-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், ஆள் கடத்தல், திருட்டு, கூட்டு கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 30 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் சுமனை கைது செய்து அவரிடமிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுமனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்து அதன் மூலம் கொலை சதி திட்டத்தை முறியடித்த சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேசை, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் உலாவந்த பிரபல ரவுடி போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்