Crime : மது போதையில் ஆட்டோவை இயக்கி விபத்தை ஏற்படுத்திய வாலிபரால் பரபரப்பு
மது போதையில் ஆட்டோவை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆவணம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20). ஆட்டோ டிரைவர். இவர் புதன்கிழமை காலை பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேராவூரணி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கணேசன் (57) எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விக்னேஷ் ஆட்டோவை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சைக்கிளில் வந்து கொண்டிருந்த கணேசன் மீது மோதியது. இதில் கணேசன் படுகாயம் அடைந்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 7 தையல் போடப்பட்டது. ஆட்டோவில் பயணித்த பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.
சம்பவத்தின் போது ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்திற்கு பின்னர் அங்கிருந்தவர்களை போதையில் விக்னேஷ் திட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் விக்னேஷ் மது போதையில் இருந்தாரா என்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பேராவூரணி நகரில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும். வாகன ஓட்டுனர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும், தவறிழைக்கும் ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரிகளான தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே பாப்பாக்குடி பெரிய தெருவை சேர்ந்த கார்த்திக் பசுபதீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த சிவா ஆகிய இருவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து கார்த்திக், சிவா ஆகிய இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியாவுக்கு பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், கும்பகோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் வழக்கு ஆவணங்களை கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்து ரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த ஆவணங்களை பரிசீலனை செய்து கார்த்திக், சிவா இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதன்படி இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.