தேர்தலில் தந்தை தோல்வி: ‛சாரி டாடி... ஐ மிஸ் யூ’ என மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த மகள்!
திண்டிவனம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தந்தை தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தந்தை தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 6,097 பதவியிடங்கள் உள்ளன. இவற்றில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது 688 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு போட்டியிட்டவர்களில் 22 வேட்பாளர்களும், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிட்டவர்களில் 369 பேரும் ஆக மொத்தம் 391 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 5,706 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வாக்கு எண்ணும் அறைகளில் 12 மேஜைகளும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 30 மேஜைகளும் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 7 முதல் 10 சுற்றுகளாக வாக்குகள் எண்ண முடிவு செய்யப்பட்டு அப்பணிகள் நடந்தன.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மகள் வான்மதி (வயது 22), இவர் ஆலம்பூண்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி,காம் படித்து வருகிறார். இவரது தந்தை சம்பத் விவசாயி. இவர் தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆசூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் 65 வாக்குகள் வித்தியாசத்தில் சம்பத் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட வான்மதி அவரது தந்தைக்கு சாரி டாடி ஐ மிஸ் யூ என செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்து பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
செய்தியை அறிந்த சம்பத் உறவினர்களுடன் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகே பைக் இருப்பது தெரியவந்தது. மேலும் விஷமருந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து திண்டிவனம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் உடலை மீட்டு, வெள்ளிமேடு பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தந்தை தோல்வியடைந்ததால் மகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.