Cuddalore Blast: கடலூர் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து.. 3 பேர் பலி...
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கடலூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகளை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலைகள், தொழிலாளர்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கடலூர்(Cuddalore) மாவட்டம் எம்.புதூரில் வாணவேடிக்கை தயாரிக்கும் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு இன்று நண்பகல் 12 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் - எம்.புதூர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு, காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/qPaRCk5SKk
— O Panneerselvam (@OfficeOfOPS) June 23, 2022
மேலும் பட்டாசு குடோனில் தொடர்ந்து வெடிகள் வெடித்து சிதறுவதால் அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/L9Elx9ZdSQ
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 23, 2022
அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸூம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்