Crime: திருவண்ணாமலையில் பட்டப்படிப்பு படிக்க சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு - மாணவி தற்கொலை முயற்சி
திருவண்ணாமலையில் சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பைத் தொடர இயலாத பிளஸ்டூ முடித்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த திருக்கோவிலூர் செல்லும் சாலையில், எடப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 80-நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் பிரதானத் தொழில் பன்றி வளர்ப்பதாக இருந்து வருகிறது. இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவதற்கும் முதன்மைத் தொழிலாக பன்றியினை வளர்த்து, அதனை விற்பனை செய்தும் வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ராஜேஷ்வரி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.
அப்போது கல்லூரி நிர்வாகத்தில் சாதி சான்று கேட்டுள்ளனர். மாணவியிடம் இல்லாததால் மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. தன்னுடன் படித்த சக மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்ததால் அவர் மட்டும் கல்லூரியில் சேர இயலாததால், மனமுடைந்த மாணவி நேற்று காலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மேலும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெற்றோருக்கு தெரிய வர, நேற்று நண்பகல் மாணவியை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் மாணவி ராஜேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், 'பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த எனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இதுதொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும், பன்னியாண்டி என்ற சாதிச் சான்று இல்லாததால் மாணவி மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார் எனவும், 12ம் வகுப்பிற்கு மேல் தங்களது பிள்ளைகள் மேல் படிப்பைத் தொடர இயலாமல் இருந்து வருவதாகவும், கிராம அலுவலகம் முதல் அரசு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் தாங்கள் அளிக்கும் புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் பெற்றோர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.