Crime: முன்விரோதம்.. தீராப்பகை.. பலியான அப்பாவி தந்தை.. என்ன நடந்தது?
செல்லையாவின் மகன் மாரியப்பனுக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவருக்குமிடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளதாக தெரிகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா, இவருக்கு வயது 43. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இன்று அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மாரியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது அங்கு அவரது தந்தை செல்லையா வீட்டின் முன்பு நின்று கொண்டுள்ளார். அப்போது ராஜா தகராறில் ஈடுபட்டதுடன் செல்லையாவை கம்பால் தாக்கியுள்ளார். இதில் செல்லையா படுகாயமடைந்து கீழே விழுந்த நிலையில் ராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லையாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்லையா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்லையாவின் மகன் மாரியப்பனும் அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவரும்செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்குமிடையே ஏற்பட்ட இந்த தகராறில் ராஜாவை பிடித்து மாரியப்பன் கீழே தள்ளி உள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மாரியப்பனை தாக்குவதற்காக ராஜா அவரது வீட்டிற்கு சென்று உள்ளார்,
ஆனால் அங்கு அவர் இல்லாததால் ஆத்திரத்தில் அவரது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் செல்லையா பரிதாபமாக உயிரிழந்தார் என தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மகனுடன் ஏற்பட்ட மோதலில் வீட்டில் இருந்த தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்