Crime: வாக்குப்பெட்டியை பாதுகாத்தபோது வெடித்த மோதல்... தலைமைக் காவலரை சுட்டுக்கொன்ற ஆயுதப்படை காவலர்!
இருவருக்குமிடையே பாதுகாப்பு பணியின்போது மோதல் வெடித்த நிலையில், ஆத்திரமடைந்த புருஷோத்தம் சிங் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுரேந்திர பகத்தை நோக்கி 20 முறை சுட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் தலைமைக் காவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், காங்கர் மாவட்டம் பானுபிரதாப்பூர் தொகுதியில் முன்னதாக இடைத்தேர்தல் நடைபெற்று முடிவு வெளியானது.
பொதுவாக வாக்குப்பதிவு முடிந்து 45 நாள்களுக்கு வாக்குப்பெட்டி பாதுகாக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், அதன்படி கான்கரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் அறையில் வாக்குப்பெட்டி பாதுகாத்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளுக்காக ஆயுதப்படை காவலர் சுரேந்திர பகத் மற்றும் காவலர் புருஷோத்தம் சிங் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்குமிடையே பாதுகாப்பு பணியின்போது மோதல் வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தம் சிங் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுரேந்திர பகத்தை நோக்கி 20 முறை சுட்டுள்ளார்.
இதில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுரேந்திர பகத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் புருஷோத்தம் சிங்கை கைது செய்தனர். தற்போது, புருஷோத்தம் சிங்கிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
முன்னதாக தேனி மாவட்டத்தில் பாதுகாப்பு படை காவலர் பணியின்போது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலையில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை காவலராக பணியாற்றி வந்தார். இவர் டிசம்பர் 7ஆம் தேதி இரும்பாலையில் உள்ள 5 வது நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வந்தார்.
தொடர்ந்து பிற்பகல் 3.10 மணியளவில் அங்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் ஐந்தாவது நுழைவாயில் பகுதிக்கு சென்று பார்த்த போது, சக்திவேல் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து உடனடியாக அவரை மீட்ட சக காவலர்கள், இரும்பாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே சக்திவேல் உயிரிழந்தார்.
சக்திவேல், தான் வைத்திருந்த இன்சாஸ் ரக துப்பாக்கியை கீழ் தாடையில் வைத்து மேல் நோக்கி சுட்டுக் கொண்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு தாடையை துளைத்துக்கொண்டு மேல் புறம் இடது கண் வழியாக வெளியேறி இருக்கின்றது.
தனக்கு விடுப்பு வழங்காததால், மனைவி மற்றும் குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு மன உளைச்சலில் இருந்த காவலர் சக்திவேல் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், கணவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் எனவும், இரண்டு நாட்களுக்குள் ஊருக்கு வருவதாக சொன்ன கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், உரிய விசாரணை செய்து கணவன் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என அவரது மனைவி சித்ரா கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.