மன அழுத்தம் தாங்க முடியல... கடிதம் எழுதி வைத்து விட்டு 13 வயது சிறுவன் தற்கொலை!
ஆருஷின் தந்தை அவரை மேல்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிருந்தார். அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் பள்ளி மாணவன் மன அழுத்தத்தால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அருகே உள்ளது அடையாளம்பட்டு. இந்தப் பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் B பிளாக்கில் 6ஆவது மாடியில் வசித்து வருபவர் அருண் சவுன். 42 வயதாகும் இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய 13 வயது மகன் ஆருஷ் அருகே உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய நிலையில், நேற்று காலை ஆருஷை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர், அபார்ட்மெண்ட் முழுவதும் அவரை தேடிய நிலையில், அபார்ட்மெண்டின் C பிளாக்கின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் ஆருஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரவாயல் போலீசார் ஆருஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆருஷின் தந்தை அவரை மேல்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிருந்தார். அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்த ஆருஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஆருஷ் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், தனக்கு மன அழுத்தம் தாங்க முடியவில்லை என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும், அம்மா தனது உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அப்பா எப்போதும் போல் நகைச்சுவையாக பேச வேண்டும் எனவும், அண்ணா தன்னை மன்னித்துவிடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்