Scientist Suicide : மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் மன உளைச்சல்..! தூக்கிட்டு தற்கொலை செய்த விஞ்ஞானி..!
மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் கல்பாக்கத்தில் அணுசக்தி விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்பாக்கம். இங்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு இங்குள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிலையம் மற்றும் பாபா அணுமின் நிலையம் போன்றவை இயங்கி வருகிறது.
இங்குள்ள பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் அணு விஞ்ஞானியாக பொறுப்பு வகித்து வருபவர் யுவராஜ். இவர் அணுவாற்றல் துறை ஊழியர் விளையாட்டு மற்றும் பண்பாட்டு கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். சஞ்சய் பள்ளியில் படித்து வருகிறார். யுவராஜிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரமும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால், யுவராஜின் மனைவி கோபித்துக்கொண்டு சென்னையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி அடிக்கடி தன்னுடன் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போடுவதாலும், கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாலும் யுவராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினமும் யுவராஜின் மகன் சஞ்சய் பள்ளிக்கு சென்றிருந்தார். சஞ்சய்க்கு யுவராஜ் மதிய உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து, பள்ளி முடிந்து சஞ்சய் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சஞ்சய் கதவை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு வீட்டில் இருந்த மின்விசிறியில் யுவராஜ் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார். தந்தை மின்விசிறியில் சடலமாக தொங்குவதை கண்ட மகன் சஞ்சய் கதறி அழுதுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோதுதான் யுவராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கல்பாக்கம் போலீசார் யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டிற்கு சென்ற காரணத்தாலே யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. கல்பாக்கம் அனுமின் நிலைய ஆராய்ச்சியாளர் யுவராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050