சென்னையில் அதிர்ச்சி.. நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல் செய்த நபர் கைது

நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21.07.2025 அன்று அதிகாலை வேலை முடித்து வீட்டிற்கு செல்ல நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் நடந்து வந்த நபர் மேற்படி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே அப்பெண் சத்தம் போடவே , அந்த நபர் ஓடும் போது , அருகிலுள்ள நபர்கள் சேர்ந்து அந்த நபரை பிடித்து , W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது விசாரணை மேற்கொண்டனர். W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (W-1 AWPS) தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கட்ராமன் ( வயது 42 ) என்பதும் மேற்படி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அதன் பேரில் , W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வெங்கட்ராமனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கட்ராமன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
தொழில் நடத்துவதற்கு உரிமம் பெற்று தருவதாக கூறி ரூ.16 இலட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபர் கைது
சென்னை அசோக்நகர் 48வது அவென்யூவில் வசித்து வரும் கண்ணன், ( வயது 53 ) என்பவர் தனக்கு சொந்தமாக அச்சிறுப்பாக்கத்தை அடுத்து கயப்பாக்கம் என்ற இடத்தில் விளை நிலம் உள்ளதாகவும் 2017ம் ஆண்டு தனக்கு தெரிந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர், தான் பால் பண்ணை நடத்தி வருவதாகவும் , மேற்படி நிலத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியதை நம்பி கண்ணன் , ராஜேஷ் கண்ணனிடம் புதிதாக தொழில் தொடங்குவதற்கு அரசிடம் அனுமதி மற்றும் உரிமம் பெறுவதற்கு ரூ.16 இலட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார்
இதுவரையில் உரிமம் பெற்று தராமலும் வாங்கிய பணத்தையும் திரும்ப தராமலும் ஏமாற்றி வருவதால் ராஜேஷ் கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கண்ணன் R-3 அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து , விசாரணை மேற்கொண்டனர். R-3 அசோக் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை முகப்பேர் மேற்கு சாதன்வார் ரோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ( வயது 48 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















