தலையில் இருந்து வழிந்த ரத்தம்.. சேலத்தை அதிரவைத்த பாஜக பிரமுகரின் மரணம்
அக்கம்பக்கத்தினர் வீட்டில் மேற்குறையில் ஏறி அதன் வழியாக பார்த்தபோது, தலைப்பகுதியில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் (எ) டெல்லி செல்வராஜ் (70), இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பிறமொழிப் பிரிவின் மாவட்ட செயலாளர் இருந்துள்ளார். தற்போது பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். செல்வராஜுக்கு இதுவரை திருமணமாகவில்லை, தனியாகவே வசித்து வருகிறார். செல்வராஜ் டெல்லியில் சேலைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஊர் திரும்பியவர் கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் இருந்துள்ளார். நேற்றும் இன்றும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் வீடு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்து உள்ளது. இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டில் மேற்குறையில் ஏறி அதன் வழியாக பார்த்தபோது, தலைப்பகுதியில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் காவேரி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மர்மமான முறையில் செல்வராஜ் உயிரிழந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதையடுத்து அவரது வீட்டின் அருகே பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செல்வராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக போலீசார் தகவல் தெரிவிக்கையில் இயற்கையான மரணம் என்பது தெரிய வந்திருப்பதாகவும். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இயற்கையாக உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என தெரிவித்தனர். பாஜக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.