Crime : பில்லி சூனிய சக்தியை அடைய பெற்ற மகனையே நரபலி கொடுத்த தந்தை..! பீகாரில் கொடூரம்..
இறந்த ஏழு வயது சிறுவனின் தாய் குஷ்பூ தேவி தனது அறிக்கையில், விஜயதசமி அன்று இரவு தனது மகன் ராகவை கொன்றதாக தனது கணவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரின் பாங்கா மாவட்டத்தில் பில்லி சூனியத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் தனது ஏழு மகனைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பில்லி சூனியம்
பில்லி சூனியம் காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிலர் மாந்திரீகத்தின் மீது அலாதி நம்பிக்கை கொண்டு, அதன் மூலம் தமக்கு பயன் கிடைக்கும் என்று நம்பி சில குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். சமயத்தில் யாரோ ஒருவரை பலி கொடுக்கும் நிலைக்கு பில்லி சூனியம் அவரை தள்ளுகிறது. பில்லி, சூனியம், நரபலி என்று யாராவது ஒருவரை காணிக்கை கொடுத்து அவர்கள் அடைய வேண்டியதை அடையலாம் என்று நினைத்து கொலைக் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். சமயத்தில் சிலர் தங்களது மகனையோ, மகளையோ கூட கொலை செய்கின்றனர் என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். அதே போல ஒருவர் மாந்திரீக சக்திகளை பெறுவதற்காகவே தனது மகனை ஆயுத பூஜை அன்று கொலை செய்த சம்பவம் பீஹாரில் நடந்தேறி உள்ளது.
மகனை கொலை செய்த தந்தை
குற்றம் சாட்டப்பட்ட தீபக் ஷர்மா, மாந்திரீகம் செய்து சூனியம் வைப்பதற்காக விஜய தசமி அன்று இரவு தனது ஏழு வயது மகன் ராகவ் குமாரை கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. பாங்கா மாவட்டத்தில் உள்ள அமர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மஹோடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.
தந்தை கைது
இறந்த ஏழு வயது சிறுவனின் தாய் குஷ்பூ தேவி தனது வாக்குமூலத்தில், விஜயதசமி அன்று இரவு தனது மகன் ராகவை கொன்றதாக தனது கணவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதனை தொடர்ந்து "தீபக் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, வெள்ளிக்கிழமையன்று அவரை வீட்டின் அருகில் உள்ள சந்தேகத்தை எழுப்பும் வகையிலான இடத்தில் இருந்து கைது செய்துள்ளோம்", என்று அமர்பூர் காவல்நிலைய தலைமை அதிகாரி சுனில் குமார் கூறினார்.
கொலை செய்தது ஏன்..?
மேலும், காவல்துறை அதிகாரி கூறும்போது தமது மகனை கொன்றுவிட்டு, தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள புதர்களுக்குப் பின்னால் தீபக்குமார் ஒளிந்து கொண்டிருந்தார் என்றும் கூறினார். அங்குதான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் சுனில்குமார் கூறினார். "அவரது அறையில் நடத்திய சோதனையில், சூனியம் தொடர்பான சில புத்தகங்கள், சென்சார் கேமரா மற்றும் பென் டிரைவ் ஆகியவற்றை நாங்கள் மீட்டுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில மாதங்களாக சூனியத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் விஜய தசமி அன்று யாகம் செய்ய காத்திருந்தார். சூனிய மந்திரங்களின் சக்தியை அடைய அவரது மகனை பலிக்கொடுத்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.