Crime : மதுபோதையில் சுவர் ஏறி குதித்த வங்கி ஊழியர்..! திருடன் என நினைத்து அடித்துக்கொன்ற பாதுகாவலர்கள்..!
மதுபோதையில் நள்ளிரவில் நண்பரின் குடியிருப்புக்குள் சுவர் ஏறிக்குதித்த வங்கி ஊழியரை திருடன் என்று பாதுகாவலர்கள் தாக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒடிசாவைச் சேர்ந்தவர் அபினாஷ்பதி. அவருக்கு வயது 27. இவர் பெங்களூரில் உள்ள தனியார் வங்கியில் பயிற்சி பெறுவதற்காக வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில், அபினாஷ்பதி தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது, நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். பின்னர், இரவு நீண்ட நேரமாகியதால் தனது நண்பரின் குடியிருப்புக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் பகுதி அருகே அமைந்துள்ளது ஆனந்த் நகர். இங்குள்ள மரதஹல்லி அடுக்குமாடி குடியிருப்பில்தான் அபினாஷின் நண்பரின் குடியிருப்பும் இருந்துள்ளது. நீண்டநேரமாக தனது நண்பரின் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் அபினாஷ்பதி தடுமாறியுள்ளார், பின்னர், ஒருவழியாக தனது நண்பரின் வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை அபினாஷ் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கேட் மூடப்பட்டு இருந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஷியாமநாத் ரே மற்றும் அஜித் முரா ஆகிய இருவரும் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் வயது 24. அடுக்குமாடி குடியிருப்பின் கதவு மூடப்பட்டு இருந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அபினாஷ் சட்டென்று சுவர் ஏறி உள்ளே குதித்துள்ளார்.
அவர் உள்ளே குதிப்பதை காவலர்கள் ரேவும், முராவும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். திடீரென மர்மநபர் ஒருவர் குடியிருப்புக்குள் எகிறி குதித்தால் அதிர்ச்சியடைந்த இருவரும் அபினாஷை சுற்றிவளைத்து தகவல் கேட்டுள்ளனர். ஆனால், அவர் பதிலளிக்க தடுமாறியுள்ளார். மேலும், தன்னுடைய நண்பர் இங்கேதான் குடியிருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியாமலும் தடுமாறியுள்ளார்.
இதனால், அபினாஷை திருடன் என்று கருதிய ரேவும், முராவும் அபினாஷை தாக்கியுள்ளனர். மேலும், அவரது தலையில் அங்கே இருந்த இரும்பு ராடால் பலமாக தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் அபினாஷ் சம்பவ இடத்திலே சரிந்தார். திடீரென அலறல் சத்தம் கேட்ட குடியிருப்புவாசிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அபினாஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனே போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அபினாஷ் பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அபினாஷ் உண்மையிலே அவரது நண்பரைத் தேடித்தான் வந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலர்கள் முரா மற்றும் ரே இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்