சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!
ஆரணியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சாப்பிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மாத்திரைகளை விற்ற மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை தெற்கு தெரு , மணியம்மை வீதி,பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள சுடுக்காடு பகுதிகளில் கல்லூரி,பள்ளி மாணவர்கள் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயண்படுத்துவதாக ஆரணி நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் கோகுல் ராஜ் தலைமையில் துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பெரியார் நகர் சுடுக்காட்டு பகுதியில் உள்ள முட்புதர்களில் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தி போதையில் இருந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்து சென்ற போதை இளைஞர்கள் போதையில் ஆட்டம் ஆடி கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தனர்.
இதனை கண்ட காவல்துறையினர் 4 இளைஞர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 100கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றினர் காவல்துறையினர். பின்னர் போதை இளைஞர்களை நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆரணி டவுன் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தனுஷ்ராஜ் வயது (21), முஸ்தபா வயது (19) மற்றும் இரண்டு சிறார்கள் ஆகியோர் என்பது தெரியவந்தது.மேலும் 4 இளைஞர்களிடம் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆரணி பையூர் சாலை 4 முனை சந்திப்பில் ஓரு மருந்து கடையில் 500 ரூபாய்க்கு போதை மாத்திரை வாங்கியது தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் 4 நபர்களையும் கைதுசெய்தனர். இதனையடுத்து பையூர் கூட்ரோட்டில் உள்ள மருந்து கடை உரிமையாளர் விஜயகுமார் வயது (40) என்பவரை காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் உடனாடியாக ஆரணி டவுன் ஆய்வாளர் கோகுல்ராஜ் செய்யார் சரக மருத்துவ ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மருந்து கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ( பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் பயன்படுத்தபடும் ) மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்றது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பயண்படுத்திய முஸ்தபா, தனுஷ்ராஜ் ஆகியோர் இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு சிறார்களுகளை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதனையொடுத்து கடையின் உரிமையாளர் பையூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் மகன் விஜயகுமார் என்பவரிடம் மருத்துவத் துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்