நண்டு சமைத்து அன்பாக அழைத்த காதலி.. நம்பிச் சென்ற ரவுடி காதலன் ... வெட்டிக் கொன்ற கும்பல்!
அங்கு வந்த கும்பல் மீரானை சராமாரி வெட்ட, காதலியே துப்புக்கொடுத்தாள் என்று எண்ணி ரத்த வெள்ளத்தில் மீரான் செத்துக்கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, லோகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் காதலியே கொலைக்கு உதவியது அம்பலமாகியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரை சேர்ந்த நாகூர் மீரான் மீது காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் உள்ள தனது காதலி லோகேஸ்வரி வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 8 பேர் கொண்ட கும்பல் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டன.
நாகூர் மீரான் கொலை வழக்கு தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின், கஞ்சா விற்பனை தகராறு மற்றும் யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகூர் மீரானை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களே சரணடைந்த நிலையில், காதலி லோகேஸ்வரி வீட்டில் நாகூர் மீரான் இருந்தது குறித்து எதிர்தரப்பினருக்கு எப்படி தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் லோகேஸ்வரியை அழைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின்போது, லோகேஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே, அவரது செல்போனை வாங்கி சோதனையில் ஈடுபட்டனர். செல்போனில், ராபினிடம் பேசியது தெரியவந்ததை தொடர்ந்து, அவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் கொலை உதவி செய்தது தெரியவந்தது.
லோகேஸ்வரி அளித்த வாக்குமூலம்: கொலை செய்யப்பட்ட நாகூர் மீரான், காதலி லோகேஸ்வரி வீட்டுக்கு அடிக்கடி வந்து தனிமையில் இருப்பார். சில தினங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தகராறு வரை சென்றுள்ளது. இதனால், நாகூர் மீரான் மீது லோகேஸ்வரி கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், ராபின், நாகூர் மீரானை கொலை செய்ய திட்டமிட்டத்தை அறிந்த லோகேஸ்வரி அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். எதிர்தரப்பினருக்கு உதவ முற்பட்ட லோகேஸ்வரி, கடந்த 14ஆம் தேதி நாகூர் மீரானிடம் செல்போனில், தனக்கு பிடித்த நண்டு சமைத்து வைத்திருப்பதாகவும், வீட்டுக்கு வா என்றும் கூறியுள்ளார்.
சண்டையிட்ட காதலி அன்பாக கூப்பிடுகிறாள் என்று, காதலி வீட்டுக்கு சென்ற மீரான், மது குடித்துவிட்டு நண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க, இந்த கேப்பில் ராபினுக்கு கால் செய்து நாகூர் மீரான் இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த கும்பல் மீரானை சராமாரி வெட்ட, காதலியே துப்புக்கொடுத்தாள் என்று எண்ணி ரத்த வெள்ளத்தில் மீரான் செத்துக்கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, லோகேஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்