திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சந்தேகமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்
கலசப்பாக்கம் அருகே காப்பலூர் கிராமத்தில் மர்மமான முறையில் ஏரியில் இறந்து கிடந்த 7 மயில்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகாமையில் அடர்ந்த முள்புதர்கள் உள்ளது. அதில் மான் மயில் போன்ற வனத்துறை சேர்ந்த வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால் மர்ம நபர்கள் அடிக்கடி வனத்துறை விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் இந்த பகுதியில் அதிக அளவில் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் பெரிய ஏரியில் மூன்று ஆண் மயில்கள் நான்கு பெண் மயில்கள் உயிரிழந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து போளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் கால்நடை மருத்துவர் அவர்களிடம் கூறி சம்பவ இடத்திற்கு விரைந்து வரவைத்து அங்கேயே மயில்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் மயில்களை காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். அதன் பின்னர் வனத்துறை அதிகாரிகள் கூறிய தகவல் என்னவென்றால் உயிரிழந்த மயில்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மயில் இறந்தது குறித்து தெரியவரும் என்றும் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதால் அதை தடுப்பதற்கு யாரோ விஷம் வைத்து கொன்றார்களா என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இதுகுறித்து அருகில் உள்ள விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும், விசாரணை முடிவில் தெரியவரும் என்று தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் மர்மமான முறையில் ஏழு மயில்கள் உயிரிழந்து இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த பகுதியில் உள்ள காடுகளில் அதிக அளவில் மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் என அதிக அளவில் உள்ளது. இந்த வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யாரும் ரோந்து பணியில் ஈடுபடாமல் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டால் வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்கலாம் என்று தெரிவித்தனர்.
கொடைக்கானல் வனப்பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்ட அரிய வகை பறவைகள்