சேலம் சிறையில் செல்போனை பறித்ததால் ஆத்திரம் - வார்டனை பல் துலக்கும் பிரஷால் தாக்கிய 2 பேர் கைது
செல்போனை பறித்ததால் 2 ரவுடிகளும், வார்டன் கார்த்திக் மீது ஆத்திரத்தில் அவரை அடிக்கடி சீண்டி வந்ததும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது

சேலம் மத்திய சிறையில் செல்போனை பறித்த கோபத்தில் வார்டனை பல் துலக்கும் பிரசால் தாக்கிய 2 கைதிகளை அஸ்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாபு அமர்நாத் உள்பட 10 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இவர்களின் எதிர்கோஷ்டிகளை சேர்ந்தவர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் இரண்டு கோஷ்டிகளுக்கு மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக பாபு, அமர்நாத் உள்பட 10 பேரை கடந்த டிசம்பர் மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் உள்ளனர். இதனிடையே இவர்கள் சேலம் மத்திய சிறையில் செல்போனை பதுக்கி வைத்திருந்து அவ்வப்போது சிலரிடம் செல்போன் பயன்படுத்தி பேசி வருவதாக சிறைதுறை அதிகாரிகள் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் மத்திய சிறையில் தனிப்படை அமைத்து சிறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தனிப்படையில் இடம் பெற்றுள்ள வார்டன் கார்த்திக் என்பவர், பாபுவிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே செல்போனை பறித்த வார்டன் கார்த்திக் மீது ஆத்திரத்தில் இருந்தனர். பல் துலக்கும் பிரசால் வார்டனை சரமாரியாக குத்தி உள்ளன. அப்போது கார்த்திக்கின் சத்தம் கேட்டு வந்த சிறை காவலர்கள் அவரை மீட்டனர். இதனிடையே பாபு கோஷ்டியை சேர்ந்த 10 பேர் அங்கு திரண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் பற்றி அஸ்தம்பட்டி காவல் துறையினரிடம் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பாபு, அமர்நாத் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சிறைக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் செல்போனை பறித்ததால் 2 ரவுடிகளும், வார்டன் கார்த்திக் மீது ஆத்திரத்தில் அவரை அடிக்கடி சீண்டி வந்ததும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு ரவுடிகளையும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் பாபு மற்றும் அவரது கோஷ்டிகளை சேர்ந்தவர்களை தனித்தனி அறைகளில் அடைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை பாளையங்கோட்டை, மதுரை, வேலூர் உள்ளிட்ட சிறைகளுக்கும் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல் துலக்கும் பிரசால் தாக்கப்பட்ட வார்டன் கார்த்திக் சிறிய காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.





















