Crime: சித்தி மீது பாலியல் ஆசை.. கொலையில் முடிந்த முயற்சி.. கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன்!
இறந்த பெண் முதலில் மாரடைப்பால் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், பிரிந்த அவரது கணவர், மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உப்பினங்குடி போலீசில் புகாரளித்தார்.
கர்நாடகாவில் சித்தியை சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தட்சினா கன்னடா மாவட்டத்தில் புத்தூர் என்ற தாலுகா உள்ளது. இங்குள்ள உப்பினங்கடி பகுதியை அடுத்த பெர்னே கிராம பஞ்சாயத்தில் பிலியூர் என்ற இடம் உள்ளது. இந்த ஊரில் 37 வயதுமிக்க பெண் ஒருவர் வசித்து வந்தார். திருமணமான நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்பெண் தனது தாயாருடன் வசித்து வந்தார். இதனிடையே அப்பெண் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உப்பினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அந்த பெண் முதலில் மாரடைப்பால் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், பிரிந்த அவரது கணவர், மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உப்பினங்குடி போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர்.
அதில் இறந்த அப்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது இறந்த பெண்ணின் அக்காவின் மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 16 வயதான அப்பையன் 10 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் தனியாக அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த சிறுவன் தான் சித்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். மேலும் சம்பவம் நடந்த அன்று சித்தியும், சிறுவனும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். ஏற்கனவே சித்தி மீது சிறுவனுக்கு பாலியல் ஆசை உண்டாகியுள்ளது. இதனால் தனியாக இருந்ததை பயன்படுத்திக்கொண்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளான். ஆனால் அப்பெண் அதனை தடுத்ததோடு சிறுவனை கண்டித்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் பயந்துபோன அச்சிறுவன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.