தஞ்சை: கூலி தொழிலாளி கொலை வழக்கு: 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தஞ்சையில் கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
தஞ்சையில் கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் மனோகரன் (30). கூலி தொழிலாளி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்தது. கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த சிலர் மனேகரனை அழைத்து சென்று, மது அருந்தினர்.
பின்னர், அவரை கொலை செய்து ஆற்றில் வீசி விட்டு சென்றனர். இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் ஜூன் 23ம் தேதி மனேகரன் உடல் கல்லணை கால்வாய் ஆற்றில் மீட்கப்பட்டது.
தொடர்ந்து மனேகரன் கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த கண்ணன் மகன் இளநீர்மணி என்ற மணிகண்டன் (35), குமார் மகன் உமாமகேஸ்வரன் (24), கண்ணன் மகன் தினேஷ் (24) ஆகிய 3 பேரும் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி சரண் அடைந்தனர்.
மேலும் சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த தனபால் மகன் சக்தி (20), ரமேஷ்குமார் மகன் கார்த்திக் (20), அர்ஜூனன் மகன் அஜித்குமார் (24), மருத்துவக்கல்லுாரி சாலை, நடராஜபுரத்தை சேர்ந்த அமுது மகன் அந்தோணிபிச்சை (35) ஆகிய நான்கு பேரையும் மேற்கு போலீசார் கைது செய்தனர். இதை போல சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்த துரை மகன் விஜய் (30), சேவப்பநாயக்கன்வாரி வடகரையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்குமார் (25), சேகர் மகன் நடராஜ் (21) ஆகியோர் தஞ்சை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் சரண் அடைந்தனர்.
இது தொடர்பாக எஸ்.பி., ரவளிப்ரியா இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மேற்கண்ட 10 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மணிகண்டன் உட்பட 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இளம்பெண் தற்கொலை
தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (32). இவருக்கும், திருவாரூர் மாவட்டம் புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவாணன் மகள் சுடர்மணி என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. அடிக்கடி சண்டை நடந்து வந்ததால் மனமுடைந்த சுடர்மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தந்தை நீலவாணன் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கள்ளப்பெரம்பர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் ரஞ்சித் தனி விசாரணை நடத்தி வருகிறார்.