Handloom Expo: மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. துவக்கி வைத்த அமைச்சர்கள்
இன்று தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியினை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர்.
இன்று தொடங்கி வருகின்ற ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையில் ரூ.2 கோடி அளவிற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இக்கண்காட்சி அரங்குகளில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி மற்றும் சேலம் மாவட்டங்களைச் சார்ந்த பட்டு சேலைகள் தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ஜவுளி இரகங்கள் சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் டை & டை சேலைகள், செட்டிநாடு புட்டா சேலைகள், ஈரோடு சென்னிமலை மற்றும் கரூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும்.
மேலும் பெட்சீட் மெத்தை விரிப்பு, துண்டு, தலையணை உறைகள், பவானி ஜமுக்காளம், கால்மிதியடி, வேலூர், காஞ்சிபுரம், கடலூர் சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி லுங்கிகள், நீலகிரிமாவட்டத்தை சார்ந்த தோடார் இன எம்பிராய்டரி துணி வகைகள் மற்றும் ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலத்தை சார்ந்த கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், பிரிண்டட் சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
இந்த கைத்தறி கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ஜவுளிகளுக்கு தமிழ்நாடு அரசின் 30% தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி அரங்குகளில் தமிழ்நாடு கைவினை உற்பத்தியாளர் குழுமங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜவுளிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் காதிப் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று 28.12.2024 முதல் 11.01.2025 வரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாயக் கூடத்தில் நடைபெறும் இம்மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை அனைத்து பொதுமக்களும் பார்வையிட்டு கைத்தறி ஜவுளிகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்க வேண்டுமென சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் கை வரிசை! தப்பியோடிய கொள்ளை கும்பல் - மடக்கி பிடித்த காவல்துறை...!
இக்கண்காட்சியில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், கைத்தறி வளர்ச்சி திட்டம் மற்றும் நெசவாளர் முத்ரா கடன் திட்டம் என மொத்தம் 581 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் நெசவாளர்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் அமுதவள்ளி, கைத்தறி துறை இயக்குநர் சண்முகசுந்திரம், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.