தமிழகம் முழுவதும் கை வரிசை! தப்பியோடிய கொள்ளை கும்பல் - மடக்கி பிடித்த காவல்துறை...!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை மயிலாடுதுறை காவல்துறையினர் மடக்கி பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை மயிலாடுதுறை காவல்துறையினர் மடக்கி பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாடுதுறை சென்ற குடும்பம்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் 23 வயதான கார்த்திகேயன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறையில் கட்டிய வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்காக கடந்த டிசம்பர் 5 -ஆம் தேதி குடும்பத்தினருடன் மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து கார்த்திகேயன் மட்டும் தினந்தோறும் அரும்பாக்கம் வீட்டிற்கு மதிய வேளையில் வந்து மீண்டும் மயிலாடுவதற்கு சென்று வந்துள்ளார்.
25 சவரன் தங்க நகைகள் கொள்ளை
இந்நிலையில் வழக்கம் போல கடந்த 11 -ம் தேதி நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கார்த்திகேயன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதனை அடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கார்த்திகேயன் அளித்த பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பூர் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.
எஸ்.பி.உத்தரவு
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் போலீசார் சிசிடிவி பதிவு மற்றும் அப்பகுதியில் செல்போன் எண்களை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் காரைக்கால் - மங்கைநல்லூர் சாலையில் தனிப்படை போலீசார் அரும்பாக்கம் பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்! காரணமான முகுந்தன் யார்?
போலீசாரை கண்டு ஓடிய குற்றவாளிகள்
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தியுள்ளனர். அதில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடியபோது அரும்பாக்கம் சட்ரசில் தடுமாறி வழுக்கி விழுந்ததில் தென்காசி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த அஜ்மீர் ( 31) என்பவருக்கு வலதுகை எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், அஜ்மீருக்கு மாவுகட்டு போட்டு விசாரணை செய்ததில் தென்காசி, மதுரை, ஈரோடு, திருவாரூர் மாவட்டம் பேரளம், காரைக்கால் நிரவி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அஜ்மீர் மீது 16 திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
நிபந்தனை ஜாமினீல் கையெழுத்து
காரைக்கால் மாவட்டம் நிரவியில் மனைவியின் வீடு உள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமினீல் கையெழுத்திட மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தங்கியிருந்த அஜ்மல் சிறைதொடர்பு நண்பர்களான திருவாரூர் மாவட்டம் இளமங்களத்தை சேர்ந்த பிரதாப் (22), சேந்தங்குடி மணக்காரமேலத்தெருவை சேர்ந்த கரண் (22), தென்காசி செங்கோட்டையை சேர்ந்த கூட்டாளி இஸ்மாயில் ஆகியோர் கூட்டாக காரில் சென்று பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் விட்டு இரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
சிறையில் அடைப்பு
அஜ்மல், பிரதாப், கரண், ஆகிய 3 பேரும் கார்த்திகேயன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்த கூட்டாளி இஸ்மாயில் பெரம்பூர் பகுதியில் ஒருகடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் இஸ்மாயிலை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கொள்ளையடித்து உருக்கி வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஒரு சொகுசு கார், ஒரு பைக் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து நால்வரையும் பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதில் பிரதாப் மீது திருட்டு மற்றும் நகைக்காக கொலைமுயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள், கரன்மீது 3 வழக்குகள், இஸ்மாயில் மீது 6 வழக்குகள் உள்ளது. காவல் ஆய்வாளர் நாகவல்லி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.