ட்ரெண்ட் இப்படி இருக்கு.. டிசிஎஸ் நிறுவனக் காலாண்டு முடிவுகள் வருவாய் 19 சதவிகிதம் உயர்வு..
இதன்படி எதிர்பார்த்ததை விட ₹10,846 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (டிசிஎஸ்) நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான (Q3 FY23) வருவாய் விவரங்களை திங்களன்று வெளியிட்டது. இதன்படி எதிர்பார்த்ததை விட ₹10,846 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது. ரெபினிட்டிவ் தரவுகளின்படி, சராசரியாக இதனுடன் சேர்த்து ₹11,046 கோடி லாபத்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் காலாண்டு முடிவுகளுக்கு முன்னதாக, டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 3 சதவிகிதத்துக்கு அதிகமாக உயர்ந்து அமெரிக்க டாலர் $3,310 இல் முடிவடைந்தது.
வருவாய் குறித்து பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் கோபிநாதன், “கிளவுட் சேவைகள், விற்பனையாளர் ஒருங்கிணைப்பு மூலம் சந்தைப் பங்கு ஆதாயங்கள் நமக்குச் சாதகமாகி உள்ளது. வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தொடர்ச்சியான உழைப்பு வேகம் ஆகியவற்றால் இயங்கியதன் காரணமாக பொதுவாகவே பலவீனமான காலாண்டாகக் கருதப்படும் இந்த பருவகாலத்தில் எங்கள் வலுவான வளர்ச்சியால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சேவைகளுக்கான தேவையின் நீடித்த வலிமையானது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் மதிப்பின் தரமாகும். மேலும் அது அவர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது. சில வருடங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது, தற்போதைய நிச்சயமற்ற தன்மைகளுக்கு அப்பால், எங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கான கண்ணோட்டம் வலுவாக உள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய சந்தைகளில் டாடா கன்சல்டன்சி நிறுவனப் பங்குகள், குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் +15.4 சதவிகித வளர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளன. கான்டினென்டல் ஐரோப்பாவில் +9.7 சதவிகிதம் வளர்ந்துள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளில், லத்தீன் அமெரிக்காவில் +14.6 சதவிகிதமும், இந்தியாவில் +9.1 சதவிகிதமும், ஆசியா பசிபிக் +9.5 சதவிகிதமும் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா +8.6 சதவிகிதமும் வளர்ந்துள்ளன.
இருப்பினும் டிசம்பர் 2022 நிலவரப்படி, நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2,197 குறைந்து 6,13,974 ஆக இருந்தது, இந்தத் துறையின் மிகப்பெரிய நிறுவனமான டாடா, ஆறு காலாண்டுகள் முன்னேற்றத்திற்குப் பிறகு, 21.5 சதவிகிதத்தில் இருந்து 21.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது, மேலும் காலாண்டு வருடாந்திர இழப்பு கிட்டத்தட்ட 6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.