TATA: பிஸ்லெரி நிறுவனத்தை கைப்பற்றும் டாடா நிறுவனம்..? எத்தனை ஆயிரம் கோடி டீல் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய மினரல் வாட்டர் விற்பனை நிறுவனமான பிஸ்லெரியை (Bislery), டாடா நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது உலகப்போர் என ஒன்று வந்தால், அது தண்ணீருக்காகவே இருக்கும் என பல உலக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் தனியார் நிறுவனங்களால் எப்படி, விற்பனை பொருளாகவும், ஆடம்பர பொருளாகவும் மாற்றப்படுகிறது என்பதை, அண்மையில் தமிழில் வெளியான சர்தார் படமும் விளக்கி இருந்தது. இந்நிலையில் தான், இந்தியாவில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலில், முதன்மையான இடத்தில் உள்ள பிஸ்லெரி நிறுவனத்தை விற்க உள்ளதாக, அதன் உரிமையாளர் சவுகான் அறிவித்து இருந்தார்.
ரூ.7,000 கோடிக்கு விற்பனையாகும் பிஸ்லெரி நிறுவனம்?:
82 வயதான சவுகான் வயது முதிர்ச்சியால் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, தனது மகள் வியாபாரத்தில் கவனம் செலுத்த விரும்பாததால், பிஸ்லெரியை அடுத்த கட்ட விரிவாக்கத்திற்கு கொண்டு செல்ல தனக்கு வாரிசு இல்லை என்றும் கூறி இருந்தார். இந்நிலையில், பிஸ்லெரியை நிறுவனத்தை விற்பது தனக்கு மிகுந்த வேதனை அளித்தாலும், டாடா குழுமம் பிஸ்லெரியை சிறப்பாக மேம்படுத்தும் என நம்புகிறேன். டாடா நிறுவனத்தின் கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் சவுகான் பேசியுள்ளார். தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரியை, ரூ.7,000 கோடிக்கு டாடா நிறுவனம் கைப்பற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா நிறுவனம் (courtesy: tata.com)
குடிநீர் வியாபாரத்தின் ”ராஜா” டாடா:
ஏற்கனெவே டாடா நிறுவனம் ஹிமாலயன், டாடா வாட்டர் பிளஸ், மவுண்ட் எவரெஸ்ட் உள்ளிட்ட பிராண்டுகளின் கீழ் மினரல் வாட்டர் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, பிஸ்லெரியை நிறுவனத்தையும் டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால், இந்திய குடிநீர் விற்பனை சந்தையின் பெரும்பகுதியை தற்போது டாடா நிறுவனம் தன் வசப்படுத்தியுள்ளது. இதனிடையே, மளிகை பொருட்கள் போன்ற அன்றாட தேவைக்கான பொருட்களின் விற்பனை சந்தையை கைப்பற்ற டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் பிஸ்லெரி நிறுவனம், டாடாவிடம் கைமாறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிஸ்லெரியின் வரலாறு:
இத்தாலியை சேர்ந்த தொழிலதிபரால் 1965ஆம் ஆண்டு மும்பையில் பிஸ்லெரி நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1969ஆம் ஆண்டு சவுகான் குடும்பம் பிஸ்லெரி நிறுவனத்தை கைப்பற்றியது. கோலா வகை குளிர் பானங்கள் மற்றும் மினரல் வாட்டர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்த அந்நிறுவனம், Thums up, Gold spot, Limca ஆகிய குளிர்பான பிரண்டுகளை, அமெரிக்காவை சேர்ந்த கோக கோலா நிறுவனத்திற்கு 1993ஆம் ஆண்டில் விற்றது. அதைத்தொடர்ந்து பிஸ்லெரி நிறுவனம் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. தற்போது பிஸ்லெரி நிறுவனத்துக்கு 122 ஆலைகள், 4,500 விநியோகஸ்தர்கள் மற்றும் 5,000 லாரிகள் என மிகப்பெரிய கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.